கொழும்புத்துறை இறங்குதுறையை அகலப்படுத்தும் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார்.

கடற்றொழிலாளர்களின் தேவைகளை கருத்திற்கொண்டு, இறங்குதுறை வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் தற்போதைய பணிநிலை மற்றும் எதிர்கால கட்டுமான நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கேட்டறிந்ததாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்துக்காக 205 மில்லியன் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ள போதிலும், திட்டமிட்ட கால அட்டவணையை விட பணிகள் சற்று தாமதமடைந்துள்ளதாக அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கடற்றொழிலாளர்கள் மற்றும் துறைசார் தரப்பினரின் நலன்களை கருத்திற்கொண்டு, எஞ்சியுள்ள பணிகளை துரிதப்படுத்தி அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.