காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு : குளிர்பானங்களை வழங்கிய கடற்படையினர்!

மண்டைதீவில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை அப்பகுதி மக்களால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த எதிர்ப்புப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரன், சிறிதரன், வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் அப்பிரதேச மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகள் உள்ளன.

இவற்றினை வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், இன்று அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டது.

இவ் அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நேற்று அழைப்பும் விடுக்கப்பட்டது.

அதன்படி குறித்த கடற்படை முகாமிற்கு முன்பாக இன்று அனைவரும் ஒன்றுதிரண்டு நிலையில் அளவீட்டு பணிகளை மேற்கொள்ள நில அளவைத் திணைக்களத்தினர் வருகை தந்திருக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றபோது, கடற்படையினர் சிற்றுண்டிகள் மற்றும் குளிர்பானங்களை வழங்கிய போதும் மக்கள் அதனை பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts