Ad Widget

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக யாழ்.பல்கலை மாணவர்கள் செயற்பட்டார்களா? – மாவை

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்காத யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டது ஏன் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சபை அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“பயங்கரவாத மற்றும் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக அவர்கள் செயற்பட்டார்களா? மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையினை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

எவ்வித காரணங்களும் தெரிவிக்கப்படாமல் யாழ். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக செயற்பட்ட இ.விக்னேஸ்வரன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஜனாதிபதி மீண்டுமொரு வரலாற்று தவறினை இழைத்துள்ளார்.

அவருக்கு எதிராக எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாமல் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளமையினை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மீண்டும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டு கடமையாற்ற ஜனாதிபதி இடமளிக்க வேண்டும்” எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

Related Posts