உலகளவில் பரவி வரும் எபோலா வைரஸ் மற்றும் இலங்கையில் பரவி வரும் மெனிஞ்சைடிஸ் எனப்படும் மூளைக்காய்ச்சல் நோய் நிலைமைகள் குறித்து சுகாதாரப் பிரிவினர் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (01) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், நாட்டில் பரவி வரும் மெனிஞ்சைடிஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்குச் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதற்காகப் பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், எபோலா நோய் தொடர்பாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், அது தொடர்பான தேவையான அறிவுறுத்தல்கள் சுகாதாரப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சில ஆபிரிக்க நாடுகளில் தான் எபோலா முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக சுகாதார ஸ்தாபனம் இதனை ஒரு அவசர நிலைமையாக அறிவித்தது.
அதுமுதல், சுகாதார அமைச்சின் நோய் விஞ்ஞான பிரிவு இது குறித்துத் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தி, எமது சுகாதாரக் கட்டமைப்புக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதற்கமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அடுத்ததாக, கடந்த நாட்களில் பதிவான மெனிஞ்சைடிஸ் நோய் குறித்து, அது கண்டறியப்பட்ட முதல் நாளிலிருந்தே கவனம் செலுத்தி, அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அதனால்தான், கடந்த நாட்களில் நடைபெற்ற தன்சல்களில் தேநீர் போன்ற சூடான பானங்களை வழங்குமாறு நாங்கள் கூறியிருந்தோம்.
ஏனெனில், ஏதேனும் ஒரு வழியில் மெனிஞ்சைடிஸ் பரவக்கூடும் என்பதால் ஆகும். எனினும், ஓரளவிற்கு அதனைத் கட்டுப்படுத்துவதற்குச் சுகாதாரப் பிரிவினர் செயல்பட்டுள்ளனர்.
இந்த அளவிற்கு நோய் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், இதனை அலட்சியமாக இருந்துவிட வேண்டாம் என அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நோய் நிலைமை முக்கியமாகச் சிறுவர்கள் மத்தியில் காணப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய அவர், நோயை மேலும் கட்டுப்படுத்துவதற்குத் தேவையானவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்குப் பொதுமக்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.