Ad Widget

உளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை

அரசாங்கத்தின் உளவுத்துறை தனது கடமையில் இருந்து தவறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொடூரமான மனிதாபிமானமற்ற செயற்பாடே இந்த குண்டுத் தாக்குதல்கள் எனவும் அதற்கு தனது கண்டனத்தினையும் அவர் தெரிவித்தார்.

இந்திய உளவுத்துறை தகவல்களை வழங்கியபோதும் அவற்றினை கவனத்திற்கொள்ளாமல் இலங்கை புலனாய்வுத்துறை செயற்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜாநேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் போது அவர் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் வணக்கத்தக்குரிய பொன்னையா ஜோசப் ஆண்டகையைச் சந்தித்து நிலைமைகள் குறித்து கலந்துரையாடினார்.

இதன்போது நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்தும், அதன் பின்னர் மேற்கொள்ளப்படவேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆயருடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக தற்போதைய நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாநகரசபை உறுப்பினர்கள் எனப் பலரும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts