2026 பிஃபா உலகக் கிண்ணத் தொடரில் உருகுவே மற்றும் கபோ வெர்டே ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

மியாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி, 2 – 2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றுள்ளது.
இருமுறை உலக சேம்பியனான உருகுவே அணியில் பல அனுபவமிக்க வீரர்கள் இருந்த போதிலும், முதன்முறையாக உலக கிண்ணத்திற்கு தகுதிப் பெற்றுள்ள கபோ வெர்டே அணியை வெற்றிக்கொள்ள முடியவில்லை.
முன்னதாக ஐரோப்பிய சேம்பியனான ஸ்பெயின் அணியை கோல் எதுவும் அடிக்க விடாமல் சமநிலைக்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, தற்போது உருகுவே அணிக்கு எதிராகவும் தங்களின் சிறந்த திறனை அந்த அணி வௌிப்படுத்தி 2026 பிஃபா உலகக் கிண்ணத்தில் மற்றொரு புள்ளியைப் பெற்றுள்ளது.
இதேவேளை உலகக் கிண்ணம் கால்பந்தாட்ட தொடரின் குரூப் ஜி-யில் இடம்பெற்றுள்ள பெல்ஜியம் மற்றும் ஈரான் அணிகள் இடையிலான ஆட்டம் லொஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டி துவக்கம் முதலே பரபரப்பாக இருந்தது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர்.
எனினும், ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
ஆட்டத்தில் மீதம் இருந்த இரண்டாவது பாதியில் கோல் அடித்து வெற்றியை பெற பெல்ஜியம் மற்றும் ஈரான் அணிகள் போராட்டத்தை தொடர்ந்தன.
ஆட்டநேர முடிவு வரையிலும் இரு அணிகளால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் நேரம் சற்று நீடிக்கப்பட்டது. மேலதிக நேரம் வழங்கப்பட்ட போதிலும், இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
இறுதியில் ஆட்டம் சமநிலையானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.