ஹெமில்டன் சிடொன் பார்க் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (1) நடைபெற்ற ஐந்தாவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 7 விக்கெட்களால் நியூஸிலாந்து மிக இலகுவாக வெற்றிகொண்டது.

கணிசமான மொத்த ஓட்டங்கள் குவிக்கப்பட்ட இந்தத் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் முறையே 4 விக்கெட்களாலும், 4 விக்கெட்களாலும் 6 விக்கெட்களாலும் வெற்றியீட்டிய இந்தியா 3 – 2 ஆட்டங்கள் என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
நான்காவது போட்டியில் நியூஸிலாந்து 87 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசிப் போட்டியில் டிம் சீஃபேர்ட், க்ளென் பிலிப்ஸ் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்கள் நியூஸிலாந்தை வெற்றிபெறச் செய்தன.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களைக் குவித்தது.
இதில் இஷான் கிஷான் 61 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஷ்ரேயஸ் ஐயர் 50 ஓட்டங்களையும் பெற்றதுடன் அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
அவர்களை விட நாமன் திர் 33 ஓட்டங்களையும் நிட்டிஷ் குமார் ரெட்டி 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அடம் மில்னே 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நேதன் ஸ்மித் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ளயார் டிக்னர் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 19 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
டிம் சீபேர்ட் 50 பந்துகளில் 11 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 93 ஓட்டங்களைக் குவித்தார்.
க்ளென் பிலிப்ஸ் 38 பந்துகளில் 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 65 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
டெரில் மிச்செல் 29 ஓட்டங்களைப் பெற்றார்.
இரண்டாவது விக்கெட்டில் டெறில் மிச்செலுடன் 73 ஓட்டங்களைப் பகிர்ந்த டிம் சீஃபேர்ட், 3ஆவது விக்கெட்டில் க்ளென் பிலிப்ஸுடன் மேலும் 86 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
ஆட்ட நாயகன்: அடம் மில்னே, தொடர் நாயகன்: க்ளென் பிலிப்ஸ் (341 ஓட்டங்கள்)