ஜூலை மாதத்தின் பிற்பகுதிக்குக்குப் பிறகு முதன்முறையாக அமெரிக்கப் படைகள் ஈரானிய நிலப்பரப்பு மீது தாக்குதல் நடத்தியுள்ளன.

ஈரானின் லாரக் தீவில் அமைந்துள்ள இரண்டு ஈரானிய ஏவுகணை ஏவுதளங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) நோக்கிய கடல்சார் கண்ணிவெடிகள் அடங்கிய ரொக்கெட் தாக்குதல்களை நடத்தத் தயாராகி வருவதைக் அவதானித்ததன் காரணமாகவே இந்த இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) ஊடகப் பேச்சாளர் கமாண்டர் டிம் ஹோக்கின்ஸ் தெரிவித்தார்.
சர்வதேச வர்த்தகக் கப்பல் பாதைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் CENTCOM குறிப்பிட்டுள்ளது.
இந்த அமெரிக்கத் தாக்குதலில் சிலர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் தகுந்த தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளன.
இதனையடுத்து ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
எனினும், ஜோர்தானிய ஆயுதப் படைகளின் பேச்சாளரை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், தமது வான்பரப்பிற்குள் நுழைந்த எட்டு ஈரானிய ஏவுகணைகளை ஜோர்தானிய வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக அழித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜூலை மாத பிற்பகுதியில் தற்காலிகமாக நிறுத்திவைத்த இராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும். இதன் காரணமாக பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் இராஜதந்திர மற்றும் இராணுவப் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.