2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு நிலவும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து இலங்கை பரீட்சைத் திணைக்களம் விசேட தெளிவுபடுத்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலை 03 ஆம் திகதி ஆரம்பமான விண்ணப்பக் கோரல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில், தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இதன்போது தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை இதுவரை கிடைக்கப் பெறாத பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் எவ்விதத் தடையுமின்றி பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் எனப் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இதன்படி, அடையாள அட்டை இல்லாத பாடசாலை விண்ணப்பதாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் ஏற்கனவே அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை, அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தமது பாதுகாவலரின் (தாய் அல்லது தந்தை) தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி இணையவழியில் பதிவு செய்து, விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் அனைத்தும் www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஆகிய உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் ஊடாக மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.
எக்காரணம் கொண்டும் விண்ணப்பக் காலம் நீடிக்கப்படமாட்டாது என்பதால், மாணவர்கள் இறுதி நேரம் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை 1911 என்ற நேரடி அழைப்பு இலக்கம் ஊடாகவோ அல்லது 0112784208, 0112784537, 0112785922 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலமோ தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.