Ad Widget

இலங்கையில் பொலிஸாரினால் திருநங்கைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்

இலங்கையில் வாழும் திருநங்கை (Transgender) சமூகத்தினர் பால்நிலை அடிப்படையிலான பாரபட்சத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால்நிலை தொடர்பான சமூக எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிவைக்காத ஏனையவர்களும் இந்த பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பால்நிலை தொடர்பான நெறிமுறைகளுக்கு இணங்கி ஒழுகாத நபர்கள் தன்னிச்சையான தடுப்பு வைப்பு, துன்புறுத்தல் என்பவற்றை எதிர்கொண்டு வருவதாகவும், தொழில், வீட்டு வசதி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு என்பவற்றை அணுகுவதில் பாரபட்சங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்தகைய தன்மையிலான பாரபட்சங்களை எதிர்கொண்டு வரும் திருநங்கை பிரிவைச் சேர்ந்த மக்களினதும், ஏனையவர்களினதும் உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்மென மனித உரிமைகள் காண்காணிப்பகத்தின் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவைச் சேர்ந்த அனைவரும் அவர்களுடைய பால்நிலை அடையாளம் அல்லது பாலீர்ப்பு என்பன என்னவாக இருந்து வந்த போதிலும், பாரபட்சம் அல்லது துஷ்பிரயோகம் என்பன இல்லாத விதத்தில் தமது உரிமைகளை அனுபவிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கம் இப்போது பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளத் தொடங்கியிருக்கும் அதே வேளையில், பால்நிலை அடையாளம் மற்றும் பாலீர்ப்பு என்பவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டும் சட்டங்கள் மற்றும் வழக்கங்கள் என்பவற்றை இல்லாதொழிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் இது தொடர்பில் நாடு முழுவதும் சுமார் 61 திருநங்கைகள் மற்றும் இடைப் பால்நிலைத்தவர் ஆகியோரிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

தாம் பொலிஸாரினால் பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துஷ்பிரயோகங்களை அனுபவித்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளதோடு, இந்தக் குழுவில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் எத்தகைய காரணங்களும் இல்லாமல் குறைந்தது ஒரு தடவையாவது பொலிஸார் தம்மை தடுத்து வைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 365 மற்றும் 365 ஏ என்பவற்றின் கீழ், சம்மதத்துடன் மேற்கொள்ளப்படும் ஒரு பால் புணர்ச்சி செயற்பாடு ஸ்ரீலங்காவில் குற்றச்செயலொன்றாக கருதப்படுகின்றது.

ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஒரு சில திருநங்கை பெண்களும், ஆண்களும் பொலிஸார் தம்மை மீண்டும் மீண்டும் துன்புறுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

தன்னிச்சையான தடுப்பு வைப்பு மற்றும் துன்புறுத்தல் என்பவற்றையும் இவை உள்ளடக்குவதோடு, இந்த செயற்பாடுகள் ஸ்ரீலங்கா அதிகாரிகள் மீதான அவர்களுடைய நம்பிக்கையை இல்லாதொழித்திருப்பதுடன், குற்றச்செயல்கள் தொடர்பாக அவர்கள் முறைப்பாடு செய்வதற்கான சாத்தியப்பாட்டையும் இல்லாமல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநங்கை சமூகத்தினர் வைத்திய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளும் விடயத்திலும் பாரபட்சத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்களிடம் இரகசியத் தன்மையை பேணிக்கொள்ள முடியாத நிலை மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஒரு சில வைத்தியர்கள் மற்றும் அதிகாரிகள் விரும்பாதிருக்கும் நிலையும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவின் தற்போதைய சட்டம், ஒருவரின் சட்டபூர்வமான பால்நிலையை மாற்றிக் கொள்வதற்கான ஒரு தெளிவான வழியை வழங்கவில்லையென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

திருநங்கை சமூகத்தை சேர்ந்தவர்கள் தாம் விரும்பும் பெயர் மற்றும் பால்நிலை என்பவற்றை பிரதிபலிக்கக் கூடிய தேசிய அடையாள அட்டை மற்றும் ஏனைய உத்தியோகபூர்வ ஆவணங்ககளை பெற்றுக்கொள்வதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநங்கை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உத்தியோகபூர்வ ஆவணங்களில் தமது பால்நிலையை மாற்றிக்கொள்வதற்கென எளிமையான மற்றும் அணுகத்தக்க ஒரு நடைமுறையை வழங்குவதற்கு அரசாங்கம் தவறியுள்ளமையானது அவர்களுடைய மனித உரிமைகளை மீறும் ஒரு செயலெனவும் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 12 முகவர் அமைப்புகள், 2015ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் அரசாங்கங்கள் இழிவுபடுத்தக்கூடிய தேவைகள் எவற்றையும் முன்வைக்காத விதத்தில் திருநங்கைகள் பால்நிலை அடையாளத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்கப்படுவதனை உத்தரவாதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts