Ad Widget

இலங்கையில் தினமும் 12 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தலாம்!

இலங்கையில் மின்சார உற்பத்திக்காக நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டால் 10 அல்லது 12 மணிநேரம் மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டி ஏற்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது கையிருப்பில் 250,000 மெட்ரிக் தொன் நிலக்கரி உள்ளது.கையிருப்பில் உள்ள நிலக்கரி ஒக்டோபர் 28 ஆம் திகதி வரை மட்டுமே போதுமானது.

நுரைச்சோலையில் உள்ள இரண்டு மின் பிறப்பாக்கிகளையும் இயக்குவதற்கு நாளொன்றுக்கு 5000 மெட்ரிக் தொன் நிலக்கரி தேவைப்படுகின்றது.

நிலக்கரி இல்லாவிடில் 900 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் இருந்து இழக்க நேரிடும்.மின்சாரத் தேவையில் 35 வீதத்தை நிலக்கரி உற்பத்தி செய்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறைந்த விலைக்கு சமர்ப்பித்த நிறுவனத்துக்கு நிலக்கரி விலைமனு வழங்கப்பட்ட போதிலும், மற்றொரு நிறுவனம் நீதிமன்ற நடவடிக்கையில் இறங்கியதன் காரணமாக விலைமனு பெற்ற நிறுவனம் நிலக்கரி வழங்க மறுத்துள்ளமையால் நிலைமை தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் இதிலிருந்து விடுபட ஐந்து நாட்களுக்கு ஒருமுறை நிலக்கரி கப்பலை கொண்டு வர வேண்டும் என்றும் அதற்கு 21 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாகவும் கடந்த வருடம் செய்த 19 முன்பதிவுகளை பணம் கொடுத்து வாங்குவதே தீர்வு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தலா 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி அடங்கிய 5 கப்பல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள லங்கா நிலக்கரி நிறுவனம், முதலாவது கப்பல் அடுத்த மாதம் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts