அம்பாந்தோட்டையை விற்று, கொழும்பை விற்று காலியை விற்று, தெற்கையே விற்று, இப்போது வடக்கையும் வெளிநாடுகளுக்கு விற்கப் போகின்ற நிலைமை உருவாகிவிட்டது.

நாளை சீன மக்களோ மலேசிய மக்களோ குடியேறி விடுகின்ற நிலை ஏற்பட்டால்கூட அந்தத் தமிழ்த் தரப்பினருக்கு அது பிரச்சினை இல்லை. உடனேயே தங்களது கட்சியின் பெயரை சீன தேசியம் என்றோ, மலேசிய தேசியம் என்றோ மாற்றிக் கொண்டு வாக்கு கேட்கப் புறப்பட்டு விடுவார்கள் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபன திருத்தச் சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவிக்கையில்,
தெற்கிலே காணிகள் சுவீகரிக்கின்றபோது வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றபோது தென்னிலங்கை அரசியல் கட்சிகள் எத்தனையோ போராட்டங்களை நடத்துகின்றன.வெகுசனப் போராட்டங்களை ஏற்பாடு செய்கின்றன.
மக்களை விழிப்பூட்டுகின்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன. அவற்றால் வெற்றியும் பெறுகின்றன. ஆனால் வடக்கிலே? நிலைமை தலை கீழாகவே இருக்கின்றது. இன்று வடக்கிலே இருக்கின்ற எமது மக்கள் அப்பகுதியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு நாளை சீன மக்களோ மலேசிய மக்களோ குடியேறி விடுகின்ற நிலை ஏற்பட்டால்கூட அந்தத் தமிழ்த் தரப்பினருக்கு அது பிரச்சினை இல்லை.
உடனேயே தங்களது கட்சியின் பெயரை சீன தேசியம் என்றோ, மலேசிய தேசியம் என்றோ மாற்றிக் கொண்டு வாக்கு கேட்கப் புறப்பட்டு விடுவார்கள். அதுதான் அவர்களது நிலைப்பாடாக இருக்கின்றது
எமது மக்கள் தனியாகப் போராடுகின்றார்கள். அதை வைத்து இந்த அரசியல் தரப்பினர் அரசாங்கத்துடன் பேசி எமது மக்களது பிரச்சினைகளைத் தீர்க்காமல் இருப்பதற்காகவே சலுகைகளைப் பெறுவதால் எமது மக்களது போராட்டங்கள் இன்னமும் வெற்றி பெறாமலேயே தொடர்கின்றன.
அடிக்கடி எமது மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்குள் தள்ளப்பட்டு வரும் நிலையில் அவர்கள் அடிக்கல் நடுவதிலேயே காட்சி கொடுக்கிறார்கள். எமது மக்கள் பல்வேறு சவால்களை வெற்றி கொள்ள வேண்டியிருக்கின்ற நிலையில், அவர்கள் சவால்களை ஏந்திக் கொண்டிருக்கின்றார்கள். இவை எல்லாமே தேர்தல் அண்மித்து வருகின்ற காலகட்ட நாடகங்கள் அன்றி வேறேதும் இல்லை என தெரிவித்தார்.