மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களுக்கு சலுகை!!

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஐவருக்கும் சில சலுகைகளை வழங்குவதற்கு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

india-fishemen-

அதன்படி, கடிதம் எழுத எந்த தடையும் இல்லை, தொலைபேசியில் பேச, விரைவில் அனுமதி வழங்கப்படும் என, வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகள், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கே.என்.சிங்ஹாவிடம் தெரிவித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வெளிக்கடை சிறைச்சாலைக்கு நேற்று சென்ற இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகள் வை.கே.சிங்ஹா, சிறைச்சாலையில் உள்ள கண்காணிப்பாளர் அறையில், தமிழக மீனவர்கள் ஐந்து பேரையும் சந்தித்தார். அப்போது, மீனவர்களை விடுதலை செய்ய, அனைத்து முயற்சிகளும், எவ்வித தாமதமும் இல்லாமல், தாராளமாக மேற்கொள்ளப்படும் என, அவர் உறுதியளித்தார்.

கொண்டு சென்றிருந்த புதிய உடைகள் மற்றும் குளியலுக்கு தேவைப்படும் பொருட்களை, மீனவர்களிடம் வழங்கியுள்ளார். அதற்காக மீனவர்கள் ஐவரும் சிங்ஹாவுக்கு நன்றி தெரிவித்ததுடன் தங்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

மேலும், தங்கள் குடும்பத்தினருக்கு கடிதம் எழுதவும், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவும், அனுமதி பெற்றுத் தர வேண்டும் என, தமிழக மீனவர்கள், சிங்ஹாவிடம் கேட்டனர். மீனவர்கள் ஐவரின் கோரிக்கையையும் சிங்ஹா இலங்கை அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதன்படி, கடிதம் எழுத எந்த தடையும் இல்லை தொலைபேசியில் பேச, விரைவில் அனுமதி வழங்கப்படும் என, இலங்கை சிறை அதிகாரிகள் தெரிவித்தனர் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.