வட, கிழக்கில் நாளை பாரிய கவனயீர்ப்பு போராட்டங்கள்!!

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு நாளை (30) சனிக்கிழமை வட, கிழக்கு மாகாணங்களில் பாரிய கவனயீர்ப்புப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் வருடாந்தம் வட, கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்படும்.

அதன் நீட்சியாக இம்முறையும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கி வடக்கிலும் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கி கிழக்கிலும் தனித்தனியாக இருவேறு கவனயீர்ப்புப்போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இது இவ்வாறிருக்க தெற்கைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் பிரிட்டோ பெர்னாண்டோ தலைமையிலான காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் பிரதிநிதிகள், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பிரதமர் ஹரினி அமரசூரியவிடமும், நீதியமைச்சிடமும், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திடமும் கொழும்பிலுள்ள சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகரகங்களிடமும் இன்றைய தினம் கையளிக்கவுள்ளனர்.

மேலும் காணாமல்போனோர் விவகாரத்தின் தற்போதைய நிலைவரம் குறித்துத் தெளிவுபடுத்தும் வகையில் காணாமல்போனோர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வொன்றும் இன்று அலரி மாளிகையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts