கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் வியாழக்கிழமை (28.08.2025) யாழ்.அரசாங்க அதிபர் அலுவலகத்தில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மாவட்டச் செயலகம் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் ஆகியோருடன் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி அவர்கள் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ளதாகவும், வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் நிச்சயம் நிறைவேறும் என்றும் அதற்கு அரசாங்க உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்தார்.
தற்போது டொலரின் பெறுமதி ஸ்திரமற்ற நிலையிலிருந்த தற்போது சீராகவுள்ளதாகவும், டொலர் கையிருப்பு படிப்படியாக அதிகரித்து 6.09 பில்லியன் டொலர் உள்ளதாகவும், இவ்வாண்டு இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 25 இலட்சத்தினை அடைந்துள்ளதாகவும், நாடு அபிவிருத்திப் பாதையில் செல்வதாகவும், பாரியளவிலான அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் எனவும், அந்தவகையில் மேன்மேலும் கூடுதலான நிதி யாழ்ப்பாண அபிவிருத்திக்கு ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் வீதி அபிவிருத்திக்கு மேலும் நிதி விடுவிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்து, நாட்டினை கட்டியெழுப்ப அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தேவைப்பாடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றத்தினை அமைச்சர் ஆராய்ந்தார்.