‘தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்’ சட்டமூலம் நிறைவேற்றம்- இலங்கை அரசாங்கம் அதிருப்தி

‘தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்’ என்று பெயரிடப்பட்டுள்ள தனி உறுப்பினரின் சட்டமூலம், கனடாவின் ஒன்டாறியோ சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கு இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகரை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடிய வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, குறித்த செயற்பாட்டுக்கு இலங்கை அரசாங்கம் சார்பில் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

இந்த சந்திப்பின்போது தினேஸ் குணவர்தன, கனடா உயர்ஸ்தானிகரிடம் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக இனங்காணப்படவில்லை என்ற கனடா அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு மாறாக தற்போது அவர்கள் நடந்துகொண்டுள்ளனர்.

ஆகவே ஒன்டாறியோ சட்டசபையின் உப ஆளுநர், குறித்த சட்டமூலத்துக்கு வழங்கிய அனுமதியை இடைநிறுத்த கனடா அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் இந்த சட்டமூலத்தினால் இருதரப்பு உறவுகள், நல்லிணக்கம் மற்றும் சமாதானம் ஆகியவற்றில் பாதிப்புகள் ஏற்படுவதற்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 6ஆம் திகதி, 104ஆம் இலக்க தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் குறித்த சட்டமூலம் கனடாவின் ஒன்டாறியோ சட்டசபையில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.