நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் நுளம்பு பரவலை கட்டுப்படுத்துவதற்காக 17 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரமாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா தொற்று தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் அதிகரித்துள்ள நுளம்பு பரவலை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் கீழ் நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் இன்று திங்கட்கிழமை முதல் (ஜூன் 30 ஆம் திகதி) ஜூலை 5 ஆம் திகதி வரையான 6 நாட்கள் தேசிய நுளம்பு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 17 மாவட்டங்களை பிரதான கேந்திர நிலையமாகக் கொண்டு மேற்படி நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் ( MOH), மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் 111 பகுதிகள் இந்த நடவடிக்கைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை இரண்டு பிரிவுகளின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன் முதலாம் கட்டம் இந்த மாதம் 30 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை கொழும்பு, இரத்தினபுரி, திருகோணமலை, மாத்தளை, பதுளை, மொனராகலை, காலி, கல்முனை மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்படும். இரண்டாம் கட்டம் கண்டி, கம்பஹா, குருநாகல், கேகாலை, கொழும்பு மாநகர சபை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக முப்படைகள் மற்றும் பொலிஸார் உட்பட 1100 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 28,752 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் கடந்த ஏப்ரல்(5166) மற்றும் மே(6034) மாதங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததுடன், இம்மாதம் 28 ஆம் திகதிவரை 5,192 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தென்மேற்குப் பருவப் பெயர்ச்சியுடன் நுளம்பு மற்றும் நுளம்புக் குடம்பிகளின் பெருக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது.
டெங்கு அபாயத்தைக் கருத்தில் கொண்டு 34 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதுவரை 16 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
சமீபகாலமாக நாட்டில் டெங்கு, சிக்குன்குன்னியா, இன்புளுவென்சா மற்றும் கொவிட்-19 ஆகிய தொற்றுக்கள் வெகுவாக பரவி வருகின்றன. இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நுளம்புகளை கட்டுப்படுத்துவதன் மூலம் டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவலிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.