இலங்கை மின்சார சபை மற்றும் பருத்தித்துறை பிரதேச அலுவலகம் மக்களை உதாசீனப்படுத்தி வருகின்றனவா?

வடமராட்சிப் பிரதேச மின்பாவனையாளர்களை இலங்கை மின்சார சபை பருத்தித்துறை பிரதேச அலுவலகம் என்பன தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகின்றன. இது குறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காது இருப்பது வேதனை தருகின்றது என்று வடமராட்சிப் பிரதேச மின் பாவனையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வடமராட்சிப் பிரதேசத்தில் மின்சாரம் தடைப்பட்டால் அதற்குரிய காரணங்களை அறியவும், மீண்டும் மின்சாரம் எப்போது கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளவும் மின் பாவனையாளர்கள் மின்சார சபையின் பருத்தித்துறை பிரதேச அலுவலகத்திற்கு தொலைபேசி எடுத்தால் தொடர்பு கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

தொடர்ந்து தொலைபேசி இணைப்பை மேற்கொள்ள முடியாமைக்கு என்ன காரணம் என்றும் மக்கள் கேட்கின்றனர். சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தடைப்பட்ட மின்சாரம் இரவு 9 மணிக்கு, அதாவது 6 மணி நேரத்துக்குப் பின்னரே வடமராட்சிப் பிரதேசத்துக்குக் கிடைத்தது.

மின் தடைப்பட்ட 6 மணி நேரமும் மின்சாரப் பாவனையாளர்கள் தொடர்பு கொள்ள இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டும் முடியவில்லை என்று மின் பாவனையாளர்கள் கூறுகின்றனர்.

பருத்தித்துறை பிரதேச சபை அலுவலகத்தில் மேலதிக தொலைபேசி ஏற்படுத்தப்பட்டு மின் பாவனையாளர்கள் இலகுவாக தொடர்பு கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பல மாதங்களாக பல்வேறு கட்டங்களிலும் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது. பருத்தித்துறை, கரவெட்டி, மருதங்கேணி பிரதேச செயலகங்களில் அபிவிருத்திகளை முன்னெடுக்க கூட்டப்படும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் இப்பிரச்சினை தொடர்பாக தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை.

இந்த அலுவலகத்துக்கும் உடனடியாக ஒரு மேலதிக தொலைபேசி வசதியை ஏற்படுத்தி மின் பாவனையாளர்கள் அவசரமாகத் தொடர்பு கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மின் பாவனையாளர்கள் கேட்கின்றனர்.