Ad Widget

அனைவரும் இணைந்து பணியாற்றினால் மாற்றம் வரும்- சூர்யா

சென்னை சாந்தோம் செயின்ட் பீட்டஸ் பள்ளியில் அகரம் பவுண்டேஷன் சார்பில் சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு 2 நாள் கருத்தரங்கம் யாதும் ஊரே என்ற பெயரில் நடைபெறுகிறது. நீதிபதி ராமசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

நடிகர் சூர்யா கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:–

உலகில் 130 லட்சத்துக்கும் அதிகமான உயிர் இனங்கள் வாழ்கின்றன. அதில் ஒரு உயிரினம் மனிதன். இன்று யானையை கொன்று தந்தம் எடுத்து யானை பொம்மை செய்கிறார்கள். நாம் வாழ எதையும் செய்ய துணிந்து விட்டோம். முட்டையில் இருந்து என்ன வரும் என்று கேட்டால், மாணவன் ‘ஆம்லட்’ வரும் என்கிறான். அதில் ஒரு உயிரும் வளரும் என்பது அவர்களுக்கு தெரிய வில்லை.

தனக்கான பாதையை அறுத்துக் கொண்டு போவதால் அதற்கு ஆறு என்று பெயர். குளிக்க பயன்படுவது குளம். நீர் ஓடுவதால் நீரோடை. ஏர் பாசனத்துக்கு பயன்படுவதால் ஆழம் அளவிட முடியாமல் இருப்பதால் கடலுக்கு ஆழி என்று பெயர்.

அகழி, அருவி உருணி, ஊற்று, கண்மாய், கல்குட்டை, கால்வாய், கிணறு என என்று தமிழர்கள் நீர் நிலை பற்றிய சொற்களை தமிழர்கள் வழங்கினார்கள்.

ஆனால் இன்று சொற்கள் மட்டும்தான் இருக்கிறது. எதிலும் நீர் இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் 40 ஆயிரம் ஏரிகள் இருந்தது என்று மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாள்வார் கூறியுள்ளார். ஆனால் இன்று பாதி ஏரிகள் இருந்த இடம் தெரியவில்லை.

மழை நீரை சேமித்து கோடையில் வறட்சி வராமல் நம்முன்னோர்கள் வாழ்ந்தார்கள். இன்று ஏரிகள் தொலைந்து விட்டன. மனிதர்கள் இல்லாமல் பறவைகளால் வாழ முடியும். ஆனால் இன்று பறவைகள் இல்லாமல் மனிதர்கள் வாழவே முடியாது என்று பறவையியல் அறிஞர் சலீம் அலி கூறியுள்ளார்.

இன்று சதுப்பு நிலங்களை எல்லாம் குப்பைமேடு ஆக்கியதால், வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றன. முன்பு மஞ்சள்பை கொண்டு வந்து பொருட்கள் வாங்கினோம். இன்று பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வாங்குகிறோம்.

உலகிலேயே அதிக இளைஞர் சக்தி உடைய நாடு இந்தியா. 35 வயதுக்கு உட்பட்டவர்கள் 65 சதவீதம் பேர் இருக்கிறார்கள். மாபெரும் மனித சக்தி நமக்கு இருக்கிறது. தவறுகளை திருத்திக் கொள்ள இதுவே சரியான தருணம். இயற்கை பொறுமை இழக்கும் போது மனிதர்கள் பெரும் துன்பப்படுகிறார்கள்.

இயற்கையை நேசித்தால் மனிதர்களுக்கு நிரந்தர மகிழ்ச்சி ஏற்படும். மழை வெள்ளத்தின் போது எவ்வித வேறுபாடும் இன்றி அனைவரும் உதவினோம். மழை வெள்ளம் நமக்குள் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. ஒன்று சேர்த்தது. அனைவரும் இணைந்து பணியாற்றினால் நிச்சயம் மாற்றம் வரும்.

இவ்வாறு சூர்யா பேசினார்.

நிகழ்ச்சியில் இந்து ராம், சத்திய நாராயணன், நடிகர் பார்த்திபன், தமிழருவி மணியன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Related Posts