Ad Widget

அஜீத் படம் ரிலீசாகும் தேதியில் 8 தியேட்டர்களில் குண்டு வெடிக்கும்!

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்துக்கு புதிய மிரட்டல் வந்துள்ளது. அந்தப் படம் வெளியாகும் பிப்ரவரி 5-ம் தேதி, சென்னையில் 8 அரங்குகளில் குண்டு வெடிக்கும் என மிரட்டியுள்ளனர் சிலர்.

ajith-thala

இதுகுறித்து சென்னையில் உள்ள உதயம் தியேட்டர் மேலாளருக்கு கடிதம் ஒன்றும் வந்துள்ளது.

அஜீத், திருவான்மியூர் என்ற பெயரிலிருந்து வந்த கடிதத்தை தியேட்டரின் மேலாளர் ஹரிஹரன் வாங்கிப் பார்த்தார்.

அதில், “என்னை அறிந்தால்’ படம் ரிலீஸ் ஆகும் அன்று உதயம் தியேட்டர் உள்ளிட்ட 8 தியேட்டர்களில் குண்டு வெடிக்கும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல அஜீத்தின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடிதம் பார்த்து பயந்துபோன ஹரிஹரன், உடனடியாக குமரன் நகர் போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் விஸ்வநாத் ஜெயின் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து சென்று தியேட்டர்களை சோதனையிட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை அனுப்பியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது இதுபோல எதிர்மறை புரளிகளைப் பரப்புவதையே சிலர் வேலையாக வைத்துள்ளனர். இதுவும் அவர்களின் வேலையோ என்ற கோணத்தில் ஆராய்ந்து வருகிறது காவல் துறை.

என்னை அறிந்தால் படம் சென்னையில் மட்டும் 45 அரங்குகளுக்கு மேல் வெளியாகிறது. தமிழகமெங்கும் 400 அரங்குகளில் வெளியாகிறது.

Related Posts