நாட்டின் பல மாவட்டங்களில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாக அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.
நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.