தீவிரவாதிகள் விடயத்தில் அரசாங்கம் அசமந்த போக்கு: மயூரன் குற்றச்சாட்டு

உரிமைக்காக குரல் கொடுத்த புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்த பலர் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் தீவிரவாதியான சஹரானுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் மீது எந்ததொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அசமந்த போக்குடன் அரசு செயற்படுகின்றதென வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ.மயூரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே செ.மயூரன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“நாட்டிலுள்ள அரசாங்கம் மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளையே தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

அந்தவகையில் அண்மையில் நடைபெற்ற தொடர் குண்டுத் தாக்குதலின் குற்றவாளிகளை இனங்கண்டப் பின்னரும் அவர்களுடன் தொடர்பினை வைத்திருந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளாமல் கதிரை அமர வைத்து பேச்சுவார்த்தை நடத்துகின்றது.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் உரிமைக்காக போராடிய போதும்கூட பயங்கரவாதிகளாகவே பார்க்கப்பட்டனர்.மேலும் அவர்களுடன் தொடர்பினை வைத்திருந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஆனால் தற்போது தொடர் குண்டுத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுடன் நேரடி தொடர்பினை வைத்திருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக அரசாங்கம் எந்ததொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமைதியாக இருக்கின்றது” என செ.மயூரன் கவலை வெளியிட்டுள்ளார்.

Related Posts