யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக பயண பொதியுடன் நடமாடிய நபர்!! பொலிஸார் விசாரணை!!

நாட்டில் நேற்று 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களையடுத்து யாழ்ப்பாணம் நகரில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இருவர் விசாரணைக்கு உள்படுத்தி விடுவிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் நகரில் இரண்டு அடையாள அட்டைகளுடன் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ஒருவரை சிறப்பு அதிரடிப் படையினர் இன்று காலை விசாரணை செய்தனர்.

திருகோணமலையைச் சேர்ந்த சந்தேகநபர் இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மதமாற்றமாகியுள்ளார். அவர் உணவகத்தில் வேலை தேடி யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்துள்ளார்.

அவரை அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கையில் பயண பொதியுடன் ஒருவர் நேற்றிரவு நடமாடியுள்ளார்.

அது தொடர்பில் அங்கிருந்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினார்கள். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அந்த நபரை விசாரணைக்கு உட்படுத்திய போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளார்.

வெளிமாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தமையால் சந்தேகத்தில் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார் என்றும் பொலிஸார் கூறினர்.

Related Posts