அம்பாறை கஞ்சிக்குடிச்சாற்றில் தமிழ் மக்களுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கு இராணுவம் முயற்சிப்பதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் உயிரிழந்த போராளிகளின் உடல்கள் விதைக்கப்பட்டுள்ள துயிலும் இல்லத்தின் மேல் இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சியை தடுத்து நிறுத்துமாறு பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் குறித்த இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்ட கலையரசன் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
புதிய இராணுவ முகாங்களை அமைப்பதென்பது தற்போதைய சூழலில் உகந்ததல்ல என்பதனை உரியவர்கள் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்ட கலையரசன், இப்பிரதேசத்தில் ஏற்கனவே இராணுவ முகாம்கள் காணப்படும் நிலையில் புதிதாக இராணுவ முகாங்களை அமைப்பதானது இப் பிரதேச மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதென சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் பல இராணுவ முகாம்கள் மூடப்பட்டு இராணுவத்தினர் வெளியேறி வருகின்றபோதும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தினை பொறுத்தவரையில் இன்னும் பொது கட்டடங்களில் இருந்தும் பாடசாலைகளில் இருந்தும் இராணுவம் வெளியேறவில்லையெனவும் கலையரசன் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பங்களித்த மக்களின் கருத்துகளுக்கு செவிசாய்த்து இப்பிரதேசத்தில் புதிய இராணுவ முகாம் அமைக்கும் நடவடிக்கையை உடன் கைவிட வேண்டுமென கலையரசன் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, மாவீரர் துயிலும் இல்லத்தை குறிவைத்து இராணுவ முகாம்களை அமைப்பதானது மக்களின் உணர்வை மழுங்கடிக்கும் செயலென குறிப்பிட்ட மட்டக்களப்பு மாவட்ட வலுவிழந்தோர் சங்கத்தின் செயலாளர் க.பிரபாகரன், இந்நடவடிக்கையை உடன் நிறுத்துவதோடு ஏற்கனவே அங்கு காணப்படும் இராணுவ முகாம்களையும் அகற்றவேண்டுமென கேட்டுக்கொண்டார்.