கடல்வழிப் பாதைகளை முடக்குவதற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!!

ஈரானின் பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்திருப்பதோடு மேலும் முக்கிய கடல்வழி பாதையை முடக்குவது குறித்து ஈரான் எச்சரித்திருக்கும் சூழலில் போர் பதற்றம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

தொடர்ந்து நான்காவது நாளாகவும் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் பிராந்திய நாடுகள் மீது மீண்டும் ஒருமுறை பதில் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டு பலவீனமான போர் நிறுத்தம் ஒன்று அமுலில் இருக்கும் நிலையிலேயே பரஸ்பர தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் ஒருமுறை முடக்கி இருப்பதோடு, பதிலுக்கு ஈரானின் கப்பல்கள் மீதான முற்றுகையை அமெரிக்கா மீண்டும் ஆரம்பித்துள்ளது. எனினும் ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்கள் மீது 20 வீத கட்டணம் அறவிடப்போவதாக டிரம்ப் முன்னர் குறிப்பிட்டதை வாபஸ் பெற்றார்.

எவ்வாறாயினும் ஈரான் பேச்சுவார்த்தைக்கு திரும்பாத பட்சத்தில் அடுத்த வாரத்தில் அந்த நாட்டின் பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக டிரம்ப் மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். பொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த போட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

‘அடுத்த வாரம் அவர்களுக்கு மிக மோசமானதாக இருக்கும்’ என்று குறிப்பிட்ட டிரம்ப், ‘அவர்களின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும் நாம் வீழ்த்தப்போகிறோம். பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பி பேச்சை ஆரம்பிக்காத பட்சத்தில் அவர்களி;ன் அனைத்து பாலங்களையும் நாம் வீழ்த்தப்போகிறோம்’ என்றார்.

முன்னதாக கடந்த ஏப்ரலிலும் பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் உட்பட ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக டிரம்ப் எச்சரித்திருந்தார். அப்போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தலைவர் வொல்கர் துர்க் அதற்கு பதில் அளித்தபோது, ‘சர்வதேச சட்டத்தின் கீழ், பொதுமக்கள் மற்றும் சிவில் உட்கட்டமைப்புகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்துவது போர் குற்றம் ஒன்றாகும்’ என்றார்.

1949ஆம் ஆண்டின் ஜெனீவா ஒப்பந்தங்கள் (போரின்போது மனிதாபிமான நடத்தைக்கான சர்வதேச ஒப்பந்தங்கள்), பொதுமக்களின் வாழ்விற்கு இன்றியமையாததாகக் கருதப்படும் இடங்கள் மற்றும் வசதிகள் மீது தாக்குதல் நடத்துவதைத் தடை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

‘வலுசக்தி இலக்குகளை நான் கடைசியானதாக வைத்திருக்கிறேன். ஆனால், கடைசியாக வலுசக்தி இலக்குகளை நான் தாக்குவேன்’ என்று டிரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியான அந்த நேர்காணலில் குறிப்பிட்டார்.

அமெரிக்க பேச்சுவார்த்தை பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை மாலை தங்கள் ஈரானிய தரப்பினரிடம், ‘நீங்கள் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது நல்லது. இல்லையெனில், உங்களிடம் எதுவும் மிச்சமிருக்காது’ என்று எச்சரித்ததாக அவர் தெரிவித்தார்.

சர்வதேச எரிசக்தி விநியோகத்தில் முக்கிய கடல்வழி பாதையாக இருக்கும் ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துவது தொடர்பிலேயே ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இந்த நீரிணையில் ஈரான் ஒப்புதல் அளிக்காத ஓமனை ஒட்டிய தெற்கு பாதையை பயன்படுத்தி பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையிலேயே அமெரிக்கா ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிகளுக்கு பயனளிக்கும் மற்ற அனைத்து ஏற்றுமதி பாதைகளையும் முடக்குவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை எச்சரித்துள்ளது.

‘பிராந்தியத்தின் எரிசக்தி ஏற்றுமதிகள் அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்; இல்லையெனில், யாருக்கும் கிடைக்கக் கூடாது’ என்று ஈரானின் அரசுச் செய்தி நிறுவனமான இர்னா நேற்று (15) வெளியிட்ட அறிக்கையில், இஸ்லாமியப் புரட்சிக் காவல் படை தெரிவித்துள்ளது.

இதில் யெமனில் ஆட்சியில் உள்ள ஹூத்திக்கள், செங்கடலுக்கான நுழைவாயிலான பாப் அல்-மந்தப் கடல்சந்தியை மூடுவது குறித்தே ஈரான் எச்சரிப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். இது அமெரிக்காவுக்கு எதிரான புதிய முனை ஒன்றை திறப்பதாக அமைவதோடு சர்வதேச எரிசக்தி நெருக்கடியை மேலும் மோசமடையச் செய்வதாக அமையும்.

இந்த குறுகிய கடல் பாதை, செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைப்பதாக உள்ளது. இதன் வழியாக சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதிகளும், உலகக் கடல் வர்த்தகக் கப்பல் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க பங்கும் கடந்து செல்கின்றன.

யெமன் மீது சவூதி அரேபியா தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் பாப் அல்-மந்தப் நீரிணையை முடக்குவதாக ஹூத்தி மூத்த அதிகாரி ஒருவர் கடந்த திங்கட்கிழமை எச்சரித்திருந்தார். அதனால் எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 200 டொலர்களை தாண்டக் கூடும் என்றும் அவர் ஈரான் ‘பிரஸ் டீவி’ இணையதளத்திற்கு குறிப்பிட்டிருந்தார்.

கடந்த திங்கள்கிழமை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையத்தின் மீது சவூதி அரேபியா குண்டு வீசியதாக குற்றம்சாட்டிய ஹூத்தி படைகள், அதற்கு பதிலடியாக சவூதி அரேபியாவை நோக்கி ஏவுகணைகளை ஏவியது. இதன் மூலம், சவூதி அரேபியாவுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹூத்தி அமைப்புக்கும் இடையே நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த போர்நிறுத்தம் முறிவடைந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போதைய பதற்றத்தினால் எண்ணெய் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்றைய வர்த்தகத்தில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 1.46 டொலர்களால் அல்லது 1.72 வீதத்தால் அதிகரித்து பீப்பாய் ஒன்று 86.19 டொலர்களாக உயர்ந்துள்ளது.

கடந்த செவ்வாய் இரவில் தொடர்ந்து நான்காவது நாளாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியது. ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தளங்கள் உட்பட ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே உள்ள இராணுவ இலக்குகளை தாக்கியதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது. எனினும் அமெரிக்கா குறைந்தது மூன்று இடங்களில் தாக்கியதாகவும் நாட்டின் தெற்கு நகரான ஹொவைசாவில் இருந்து கோதுமை சேமிப்புக் கிடங்கு ஒன்று தாக்கப்பட்டதாகவும் ஈரான் அரச சார்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் புதிய தாக்குதல்களில் 260 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக ஈரான் சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஹொஸைன் கர்மன்புர் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்களில் மூவர் 18 வயதுக்கு குறைந்தவர்கள் என்பதோடு குறைந்தது இருவர் தாக்குதல்களில் கொல்லப்பட்டிருப்பதாக அவர் எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம் குவைட், பஹ்ரைன் மற்றும் ஜோர்தானை இலக்கு வைத்து ஈரான் நேற்று பதில் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை பயன்படுத்தும் முகாம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டதாக ஈரான் புரட்சிக் காவல் படை தெரிவித்துள்ளது.

Related Posts