ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் மட்டும் 10,000க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

ஐரோப்பாவின் மேற்குப் பகுதியை உலுக்கிய மிகக் கடும் வெப்ப அலையினால் ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் மட்டும் 10,000-க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியவற்றின் ஆதரவுடன் செயல்படும் யூரோமோமோ அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின்படி,ஜூன் 22 முதல் 28 வரையிலான ஒரே வாரத்தில் மட்டும் ஐரோப்பாவில் 10,650 உபரி மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் 9,000-க்கும் அதிகமான மரணங்கள் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயோதிபர்களுக்கே நிகழ்ந்துள்ளன.

கடும் வெப்பத்தினால் ஏற்படும் வெப்பவாதம் மற்றும் ஏற்கனவே இருக்கும் இருதய நோய், சுவாசப் பிரச்சினைகள் தீவிரமடைவதே இந்த மரணங்களுக்குக் காரணமாகத் தெரிவிக்கப்படுகிறது.

“வருடத்தின் இந்தத் தட்பவெப்பக் காலத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மரணங்கள் நிகழ்வது மிகவும் அசாதாரணமானது. இதைத் தீவிர வெப்ப அலையைத் தவிர வேறு எதனாலும் விளக்க முடியாது” என டென்மார்க்கின் ஸ்டேட்டன்ஸ் செரம் நிறுவனத்தின் தலைமை வைத்தியர் லாஸ் வெஸ்டர்கார்ட் தெரிவித்துள்ளார்.

யூரோமோமோ அமைப்பு நாடுகள் ரீதியான தனிப்பட்ட தரவுகளை வெளியிடாவிட்டாலும், ஜூன் மாத இறுதியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் மட்டுமே “மிக மிக அதிக அளவிலான மரணங்கள்” பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்ட பதிவுகளிலேயே, இந்த வெப்ப அலையின் போதுதான் பெல்ஜியத்தின் மிக மோசமான மரண விகிதம் பதிவாகியுள்ளதாகப் பெல்ஜியத்தின் பொது சுகாதார நிறுவனமான ‘Sciensano’ தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் மே மற்றும் ஜூன் மாத வெப்ப அலைகளால் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மட்டும் சுமார் 2,700 பேர் உயிரிழந்துள்ளதாக லண்டன் இம்பீரியல் கல்லூரி நடத்திய தனி ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது

மனிதர்களின் செயல்பாடுகளால் ஏற்படும் உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் இல்லையென்றால், ஜூன் மாத இறுதியில் நிலவிய இத்தகைய கொடூரமான வெப்ப அலை சாத்தியமே இல்லை என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த வெப்ப அலையானது பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பிரித்தானியாவில் மின்சார விநியோகத்தைப் பாதித்ததுடன், பாடசாலைகள் மூடப்படுவதற்கும் வழிவகுத்தது.

Related Posts