உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவின் கப்பல் போக்குவரத்து முடங்கியது!!

ஒரே வாரத்தில் 90-க்கும் மேற்பட்ட ரஷ்யக் கப்பல்களை உக்ரேனிய ட்ரோன்கள் (Drones) குறிவைத்துத் தாக்கியதைத் தொடர்ந்து, ரஷ்யாவிற்குப் பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த அசோவ் கடலில் (Sea of Azov) தனது கப்பல் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க மாஸ்கோ நிர்பந்திக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் ட்ரோன் படைப் பிரிவுகளின் தலைவர் ராபர்ட் ப்ரோவ்டி இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தங்கள் படைகள் இரவு நேரத்தில் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவின் 10 எண்ணெய் கப்பல்கள் மற்றும் நான்கு படகுகள் கடுமையாக சேதமடைந்ததாகத் தெரிவித்தார். மேலும், சிஸ்ரான் (Syzran) நகரிலுள்ள ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள கிரீமியாவின் மின் துணை நிலையங்கள் மீதும் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

“ரஷ்யப் பேரரசின் தொழில்நுட்ப ரீதியான அவமானம் தொடர்கிறது. கிரீமியாவால் ரஷ்யா வீழ்ச்சியடையும்” என்று ப்ரோவ்டி தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சர்வதேச பொருளாதாரத் தடைகளை மீறி மாஸ்கோவினால் இயக்கப்பட்டு வந்த கள்ளச்சந்தை எண்ணெய் கடத்தல் கப்பல்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாகக் குறைந்துள்ளது. அசோவ் கடலையும் கருங்கடலையும் இணைக்கும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ‘கெர்ச் நீரிணையை’ (Kerch Strait) இனி ரஷ்யாவால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பு கூறுகிறது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த வெள்ளிக்கிழமை முதல் ‘டான்-அசோவ்’ கால்வாய் வழியாகச் செல்லும் ரஷ்யாவின் ஆற்றுப் போக்குவரத்து மற்றும் காஸ்பியன் கடலுடனான இணைப்புகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. கெர்ச் மற்றும் துருக்கியின் போஸ்பரஸ் நீரிணை வழியாகச் செல்லும் ரஷ்யாவின் ஏற்றுமதிப் பாதைகள் தற்போது நடைமுறையில் முடக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து உக்ரைனின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரி ஜகோரோட்னியுக் கூறுகையில், “ரஷ்யா ஒரு முக்கியமான கடல்வழிப் பாதையின் மீதான தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த முற்றுகையின் காரணமாக:

  • ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு உக்ரைனிலிருந்து ரஷ்யாவால் திருடப்பட்டு, பெர்டியன்ஸ்க் மற்றும் மரியுபோல் துறைமுகங்கள் வழியாகக் கொண்டு செல்லப்பட்ட தானியக் கப்பல்கள் முடங்கியுள்ளன.

  • காஸ்பியன் கடலில் இருந்த ரஷ்யாவின் சிறிய கப்பல் படையும் சிக்கிக்கொண்டது.

  • அசோவ்-கருங்கடல் கால்வாய்க்குள் நுழைந்த ரஷ்ய எண்ணெய் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்ததோடு, டகான்ரோக் (Taganrog) கடற்கரைப் பகுதியில் பெருமளவில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் இராணுவம் திட்டமிட்டபடி ரஷ்யாவின் ரேடார் மற்றும் வான்வழித் தாக்குதல் தடுப்பு அமைப்புகளை அழித்து வருவதால், உக்ரேனிய எல்லையிலிருந்து சுமார் 2,700 கி.மீ தொலைவில் உள்ள சைபீரிய நகரமான ஓம்ஸ்க் (Omsk) வரை சென்று ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த முடிந்துள்ளது.

இந்தத் தொடர் தாக்குதல்களால் நிலைகுலைந்துள்ள கிரிமியா பகுதியில் ரஷ்ய அதிகாரிகள் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளனர். அங்கு கடுமையான பெட்ரோல் தட்டுப்பாடும், பரவலான மின்வெட்டும் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியின் சுற்றுலாத் துறை முற்றிலுமாக முடங்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Posts