AI மூலம் பேஸ்புக்கில் பெண்களின் போலி கணக்குகள்: இலங்கையில் வெளிச்சத்திற்கு வந்த பாரிய மோசடி!!

இலங்கையில் பேஸ்புக் (Facebook) தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பெண்களின் பெயர்களில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் நடத்தப்படும் ஒரு திட்டமிட்ட ஏமாற்று மற்றும் பணமாக்கும் வலைப்பின்னல் ஆய்வொன்றின் மூலம் முதன்முறையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஊடகவியலாளரும் தகவல் ஆய்வாளருமான சஞ்சன ஹத்தொடுவ (Sanjana Hattotuwa) வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஆய்வின் முக்கிய விபரங்கள்:

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 10 பேஸ்புக் கணக்குகளில் உள்ள பெண்கள் எவருமே உண்மையானவர்கள் அல்லர். அவர்கள் அனைவரும் AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி உருவங்களாகும்.

இந்த கணக்குகளில் சிங்கள மொழியில் தங்களை ஏழைகள், கணவனை இழந்தவர்கள் அல்லது விவாகரத்தான தனிமையான பெண்கள் எனச் சித்தரித்து பதிவுகள் இடப்படுகின்றன. இதன் மூலம் ஆண்களின் அனுதாபத்தைப் பெற்று, அவர்களை வாட்ஸ்அப் (WhatsApp) போன்ற தனிப்பட்ட அரட்டைகளுக்குள் ஈர்க்கின்றனர்.

பேஸ்புக்கின் விதிமுறைகளை மீறாத வகையில், நுணுக்கமான முறையில் வடிவமைக்கப்பட்ட கவர்ச்சிகரமான போலிப் பெண்களின் படங்கள் இந்த மோசடிக்கு பயன்படுத்தப்படுகின்றன.

இக்கணக்குகளின் சுயவிபரக் குறிப்பு (Bio) மற்றும் கமெண்ட்களில் வழங்கப்படும் லிங்குகள் (Links) மூலம் பயனர்கள் வயது வந்தோருக்கான சாட்டிங், இணையச் சூதாட்டம், கிரிப்டோ கரன்சி ஏமாற்றுப் பக்கங்கள் மற்றும் விளம்பரத் தளங்களுக்கு திசைதிருப்பப்பட்டு பணமாக்கப்படுகின்றனர்.

இந்த போலி கணக்குகளில் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான தலைப்புகளுடன் (Captions) மிகக்குறுகிய நிமிட இடைவெளிகளில் பதிவுகள் இடப்படுகின்றன. இதுவரை 1,706 பதிவுகள் மூலம் கிட்டத்தட்ட 9 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களின் ஈடுபாட்டை (Engagements) இந்த வலைப்பின்னல் பெற்றுள்ளது.

இத்தகைய செயல்பாடுகள் ஸ்பானிஷ், இத்தாலி மற்றும் மலையாள மொழிகளிலும் கண்டறியப்பட்டுள்ளதால், இது சர்வதேச அளவில் இயங்கும் ஒரு மோசடி கும்பலின் இலங்கைக்கான கிளை (Franchise) போன்று செயல்படுவதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான போலி கணக்குகளை சாதாரண பயனர்களால் கண்டறிவது மிகவும் கடினம் எனவும், பேஸ்புக் போன்ற சமூக ஊடகத் தளங்களின் குறைபாடுகளைப் பயன்படுத்தி இந்த மோசடிகள் தடையின்றி அரங்கேறி வருவதாகவும் இந்த ஆய்வு எச்சரித்துள்ளது.

Related Posts