பிஃபா (FIFA) உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் பங்கேற்றுள்ள ஜெர்மனி நாட்டு வீரர்கள், தற்போது ஆட்ட உத்திகள் மற்றும் எதிரணிகள் குறித்து மட்டுமன்றி, மற்றொரு விசித்திரமான பிரச்சினைக்கும் முகம் கொடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் வட கரோலினா (North Carolina) மாநிலத்தின் வின்ஸ்டன்-சேலம் (Winston-Salem) பகுதியில் அமைந்துள்ள தங்களது பயிற்சி முகாமிற்கு அருகில் பாம்பு ஒன்று கண்டறியப்பட்டதை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெர்மனி அணியின் தலைவர் ஜோசுவா கிம்மிக் (Joshua Kimmich), புற்களுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்புகள் குறித்து தானும் தனது அணியினரும் தீவிர அவதானத்துடன் இருப்பதாகக் கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்து மற்றும் நோர்வே அணிகளிடமிருந்தும் இது போன்ற முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
வெளிநாட்டு ஊடகங்களின்படி, கிம்மிக் உள்ளிட்ட குழுவினர் கண்ட பாம்பு, வட கரோலினா மாநிலத்தில் பரவலாகக் காணப்படும் ‘கொப்பர்ஹெட்’ (Copperhead) எனப்படும் அதிக நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் பாம்பாகும்.
இது தவிர, சுவிட்சர்லாந்து அணியும் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் சான் டியாகோவில் (San Diego) அமைந்திருந்த தங்களது பயிற்சி முகாம் சுற்றியுள்ள பகுதிகளை “பாம்புகள் நடமாட்டமுள்ள வலயங்கள்” என பெயரிட நடவடிக்கை எடுத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாங்கள் கண்ட பாம்பு நச்சுத்தன்மை வாய்ந்தது எனத் தெரிந்த கணத்திலிருந்து வீரர்களிடையே ஒருவித பதற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மனி அணியின் தலைவர் கிம்மிக் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் நேற்று ஒரு பாம்பைப் பார்த்தோம். அது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது என்று எங்களிடம் கூறப்பட்டது. பாம்பு கடித்தால் நேரடியாக வைத்தியசாலைக்குத்தான் செல்ல வேண்டும். மரணம் நேராவிட்டாலும் அது மிகவும் ஆபத்தானது. இவ்வாறான ஒரு பாம்பை மிதித்துவிட்டால் அது மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு முறை உலக செம்பியன்களான ஜெர்மனி அணி, இம்முறை கால்பந்து தொடரை குராசோ (Curacao) அணியை 7-1 என்ற கணக்கில் வீழ்த்தி அதிரடியாகத் தொடங்கியது.
அவர்களின் அடுத்த போட்டி ஜூன் 21ஆம் திகதி ஐவரி கோஸ்ட் (Ivory Coast) அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.
இதேவேளை, நோர்வே அணியின் தலைவர் கிறிஸ்டியன் தோஸ்ட்வெட் (Kristian Thorstvedt) இந்த நிலைமை குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
“நாங்கள் கால்பந்து உலகின் மிகப்பெரிய தொடருக்குத் தயாராக வந்திருக்கிறோம். ஆனால் இப்போது வீரர்கள் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பதற்கு முன்னால் தரையைப் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் கொப்பர்ஹெட் பாம்புகள் அதிகம் இருப்பதாகக் கேள்விப்படுவது குறித்து நான் மிகவும் வருத்தமடைகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.