Ad Widget

Childer’s Hackerthon போட்டித் தொடரில் சிறந்த பத்து குழுவில் யாழ். வேம்படிமகளிர் உயர்தர பாடசாலை

கடும் போட்டிகளுக்கு மத்தியில் ஹெக்கதோன் போட்டித் தொடரில் மூன்று பாடசாலைகள் முதல் மூன்று இடங்களுக்கு தெரிவாகின.

vembady-girls

இலங்கையில் பாடசாலை மட்டத்தில் இடம்பெற்ற கணினிப் போட்டிகளில் முதன் முறையாக யாழ்ப்பாணத்தின் வேம்படிமகளிர் உயர்தர பாடசாலை முதல் பத்து இடங்களில் இடம்பிடித்ததோடு, வேம்படி உயர் பாடசாலை மாணவிகளின் கணினித் தீர்வுகளும் முக்கிய இடம் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சிறுவர் உரிமை மாநாட்டின் 25 ஆவது வருடத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சிறுவர்களுக்கான நிதியம் (UNICEF) 2014ஆம் ஆண்டை சர்வதேச சிறுவர் ஞாபகார்த்த வருடமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

இதனை அனுஷ்டிக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் சிறுவர்களுக்கான நிதியம் இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் பங்குபற்றச் செய்து குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக கணினி தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளை சிறுவர்கள் மூலமாகவே பெற்றுக் கொள்ளும் முகமாக இலங்கையில் முதன் முறையாக ´ஹெக்கதோன்´ போட்டியொன்றை நடத்தியது.

நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் அதிகமான பாடசாலைகள் இந்த போட்டியில் பங்குபற்றியிருந்தன. இந்த போட்டியில் முதல் சுற்றில் 25 சிறந்த பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டன. இந்த பாடசாலைகள் மத்தியில் கடும் போட்டி நிலவியதோடு, பல தீர்வுத் திட்டங்களும் முன்வைக்கப்பட்டன. இந்தத் தீர்வுத் திட்டங்களின் அடிப்படையில் அரையிறுதிச் சுற்றுக்கு 10 பாடசாலைக் குழுக்கள் தெரிவுசெய்யப்பட்டன.

Childer’s Hackerthon போட்டியின் அரையிறுதிச் சுற்றுப் போட்டி 30-10-2014 அன்று கோட்டேவோட்டர்ஸ் ஏஜ்ஜில் நடைபெற்றது. இந்த போட்டி அன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 7.30 அளவில் பரிசளிப்பு வைபவத்துடன் முடிவடைந்ததோடு, இதில் பங்குபற்றிய 10 குழுக்களும் தமது கணினித் தீர்வுகளை நடுவர்களுக்கு விளக்கியதோடு, வர்ணனை யொன்றையும் அளித்தனர். அத்தோடு நடுவர்கள் கேட்ட குறுக்குக் கேள்விகளுக்கும் தெளிவான விளக்கத்தையும் அளித்தனர்.

இந்த நிலையில் இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், வடமாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு இடைக்கிடையில் அரசியல் மாற்றங்கள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகள் ஏற்பட்டுவருகின்ற போதிலும் யாழ் மாணவர்கள் மத்தியில் கல்வி மேலும் சிறந்த விளங்குவதைக் காணமுடிகின்றது. வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவிகள் நடுவர்கள் முன்னிலையில் சரளமாகவும் தைரியமாகவும் ஆங்கில மொழியில் தமது படைப்பாற்றல்களை விளக்கியமையானது ஏனைய மாணவர்கள் மத்தியிலும் நடுவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் மதிப்பும் அளிக்கப்பட்டது என்றே கூறவேண்டும்.

இந்தநிலையில், யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவிகள் முன்வைத்த கணினித் தீர்வானது பாடசாலை மட்டத்தில் உள்ள மாணவர்கள் தமது திறமைகளை எவ்வாறு உலகிற்கு வெளிப்படுத்தலாம் என்பதாகும். அதில் பல்வேறு பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. இசை, நாடகம், பேச்சு, கவிதை, நடனம் உட்பட பல்வேறு பகுதிகள் அதில் உள்ளடங்குகின்றன.

குறிப்பாக மேடையில் ஏறிதமது ஆற்றலை வெளிப்படுத்த தயங்கும், மற்றும் கூச்சசுபாவமுள்ள மாணவர்களுக்கு தமது திறமைகளை தைரியமாக வெளிப்படுத்துவதற்கு இதுவொரு சிறந்த மேடையாகவும், தளமாகவும் அமையுமென்பதே அவர்களது தீர்வுத் திட்டமாகும்.

இந்த தீர்வுத் திட்டத்தை முன்வைத்த போது, நடுவர்கள் குழு பல்வேறு கேள்விகளை எழுப்பின அதற்கு தைரியமாகவும், நேர்மையாகவும் பதிலளித்தனர். அத்தோடு அதனை எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுத்துவது என்பது தொடர்பாகவும் தெளிவான விளக்கம் ஒன்றை அளித்தமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அரையிறுதிச் சுற்றில் பங்குபற்றிய 10 பாடசாலை மாணவக் குழுக்களும் தங்களது தீர்வுகளை முன்வைத்தனர். பலத்த போட்டிக்கு மத்தியில் ஆச்சரியத்தில் திகைத்துப் போனநடுவர் குழு யாரைத் தெரிவு செய்வது என்ற சந்தேகம் எழும் அளவிற்கு மாணவர்கள் தங்களது கணினித் தீர்வுகளை முன்வைத்திருந்தமையே இதற்குக் காரணம்.

எனினும் போட்டியில் வெற்றி பெற்றவர்களை அறிவிக்க வேண்டுமே என்பதற்காக மூவரை தெரிவுசெய்தனர். இந்த நிலையில் நடுவர் குழுவில் அங்கம் வகித்த Slasscom நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் ImbranFurkan கருத்து தெரிவிக்கையில், பாடசாலை மட்டத்தில் இந்தளவு திறமையானவர்கள் இருக்கிறார்களா என்று நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. நாங்கள் நடுவர்களாக யாரைத் தெரிவு செய்வது என திகைத்துப் போனோம். பத்து குழுக்களுக்கு இடையிலும் சிறுசிறு புள்ளி வித்தியாசமே இருக்கின்றது. அந்தளவுக்கு ஒவ்வொரு குழுவும் தமது செயற்பாடுகளை ஒழுங்காக செய்திருக்கிறார்கள். இவர்கள் எதிர்காலத்தில் சிறந்த கணினி மென்பொருள் நிபுணர்களாக வருவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இலங்கை நிச்சயமாக கணினித் துறையில் சிறந்து விளங்கும் என்பதற்கு இந்த போட்டி நிகழ்ச்சி ஒரு சான்றாகும் என்றார்.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளின் விபரங்கள் வருமாறு, பெந்தர மிரிஸ்வத்த பாடசாலை முதலாம் இடத்தையும், கொழும்புடி.எஸ். சேனாநாயக்ககல்லூரி இரண்டாம் இடம்தையும், கிரிபத்கொட விகாரமஹாதேவி மகளிர் பாடசாலை மூன்றாம் இடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஹெக்கதோன் போட்டியை கல்வி அமைச்சு, இலங்கை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம், மைக்ரோசொவ்ட் ஸ்ரீலங்கா, கூகில் ஆகிய நிறுவனங்களை இணைத்துக் கொண்டு UNICEF நிறுவனம் இதனை சிறப்பாக மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts