Ad Widget

86 இந்திய மீனவர்கள் கைது

சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 86 பேரை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து வியாழக்கிழமை (26) மாலை கைது செய்ததாக யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறைத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் பாலசுப்பிரமணியம் ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் பயணித்த 5 படகுகளை கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு உடனடி தீர்வு பெற்றுத்தருமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கடற்பகுதியில் தொழில் ஈடுபட்டிருந்த கட்டைக்காட்டைச் சேர்ந்த மீனவர்களுடன் வியாழக்கிழமை அதிகாலை வாய்த்தர்க்கத்தில் ஈடபட்டிருந்த இந்திய மீனவர்கள், பின்னர் பெற்றோல் குண்டு, கத்தி, கொட்டான்கள், இரும்பு கம்பிகள் மற்றும் கூறிய ஆயுதங்களால் கட்டைக்காடு மீனவர்களின் படகுகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் மீனவர்கள் சிலருக்கும் சிறுகாயங்கள் ஏற்பட்டது.

புதன்கிழமையும் (25) இவ்வாறு அத்துமீறிய இந்திய மீனவர்கள், தமது வலைகளை அறுத்தெறிந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்ததாகவும் இதனால் பல இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டதாகவும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்கத்தலைவர் நாகமுத்து நாகேஸ்வரன் தெரிவித்திருந்தார். இவ்விரு சம்பவங்களையும் கண்டித்தே இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

Related Posts