பெற்றோர்கள் சொல்லால் அல்ல; செயலால் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்: பொ. ஐங்கரநேசன் வலியுறுத்தல்

பெற்றோர்களுக்குத் தற்போதைய சூழலில் பிள்ளைகளை வளர்ப்பது பெரும் சவாலாக உள்ளது. தங்கள் பிள்ளைகள் தவறான வழிக்குச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, ‘அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே’ என்று தினமும் அறிவுரைகளால் பிள்ளைகளை வழிநடத்த முயல்கிறார்கள். ஆனால், இன்றைய பிள்ளைகள் பெற்றோர்கள் சொல்வதையல்ல, செய்வதையே செய்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பசுமை இயக்கத்தின் மாணவர்களை வலுவூட்டும் ‘பசுமை அறிவொளி’ நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (08) நாவாந்துறை சென். மேரிஸ் சனசமூக நிலைய முன்றிலில் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;

“மாணவர்களிடையே தவறான பழக்கவழக்கங்கள் அதிகரித்து வருகின்றன. பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் கீழ்ப்படியாத போக்குத் தலைதூக்கியுள்ளது. வன்முறைகளில் ஈடுபடுவதுடன், போதைப்பொருள் பாவனைக்குக் கூட அடிமையாகி வருகிறார்கள். இந்த இளம் தலைமுறையை இவ்வாறு செல்ல அனுமதிக்க முடியாது. இது சம்பந்தப்பட்ட அந்த ஒரு மாணவரை மட்டுமல்ல அவரது குடும்பத்தை மட்டுமல்ல எமது ஒட்டுமொத்தச் சமூகத்தின் எதிர்காலத்தையுமே படுகுழிக்குள் தள்ளிவிடும். எனவே, எமது மாணவர்களை நல்வழியில் நடைபோட வைக்கச் சகல தரப்பினரும் முன்வர வேண்டும். இதில் பாடசாலைகளை விடப் பெற்றோருக்கே பெரும் பங்கு உள்ளது.

எந்தவொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகளைக் குறை சொல்வதற்கு மனம் ஒப்பாது. பிள்ளைகளின் தவறான பழக்கங்களுக்கு அவர்களின் நண்பர்களையே குற்றம் சாட்டுவார்கள். தவறானவர்களின் சேர்க்கையினாலேயே தம்முடைய பிள்ளைகள் பழுதாகிவிட்டதாகக் கூறுவார்கள். ஆனால், மாணவர்கள் பாடசாலைகளில் செலவிடும் நேரத்தை விட, நண்பர்களுடன் செலவிடும் நேரத்தை விட, பெற்றோர்களுடன் செலவிடும் நேரமே அதிகம். பிள்ளைகளின் நடத்தைகளில் தமக்கே பெரும் பங்கு உண்டு என்பதை மறந்துவிட்டு, மற்றவர்களால்தான் பிள்ளைகள் கெட்டுவிட்டனர் என்று கூறுவது தங்களைப் பொறுப்புக்கூற விரும்பாத ஒருவகை உளவியல் தப்பிதமாகும்.

வீடுதான் பிள்ளைகளின் முதல் பாடசாலை பெற்றோர்தான் பிள்ளைகளின் முதல் ஆசிரியர்கள் மற்றும் முன்னுதாரணங்கள். பெற்றோர் எதைச் செய்கிறார்களோ, பிள்ளைகளும் பிரதி செய்யும் இயந்திரம் போல அதையே செய்வார்கள். பெற்றோர் புகைப்பிடித்தால், மது அருந்தினால், பொய் பேசினால், இரவு நேரங்களில் தொலைக்காட்சிகளிலும் செல்லிடப்பேசிகளிலும் மூழ்கிக்கிடந்தால், தமக்கிடையே வாக்குவாதங்களில் ஈடுபட்டால் பிள்ளைகளும் அவற்றையே பிரதிபலிப்பார்கள். இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, பிள்ளைகள் எவ்வாறு வளர வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகிறார்களோ, அவ்வாறே தாங்களும் வாழ்ந்து வழிகாட்ட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Related Posts