Ad Widget

70 வயதைத் தாண்டிய முதியோரின் விபரங்கள் திரட்டல்

நாடு முழுவதிலுமுள்ள 70 வயதைத் தாண்டிய முதியவர்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டும் நடவடிக்கையொன்றை, சமூக சேவைகள் அமைச்சின் முதியோர் தேசிய செயலகம் முன்னெடுத்து வருகின்றது.

இது தொடர்பில், அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமாரினால் கைச்சாத்திடப்பட்ட சுற்றறிக்கையொன்று அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

70 வயதைக் கடந்த, வருமானம் குறைந்த முதியவர்களுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டமொன்று, சமூக சேவைகள் அமைச்சினால் 2012ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முதியோர்களுக்கான இந்த கொடுப்பனவுகளை வழங்குவதற்கு 2015 ஆம் ஆண்டு எவ்வளவு நிதியை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பதற்கான கணக்கெடுப்பொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த கணக்கெடுப்புக்காகவே இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, 70 வயதைத் தாண்டிய முதயவர்கள் தொடர்பில் தகவல்கள் திரட்டப்படுகின்றன. இந்த கணக்கெடுப்பை மாவட்ட சமூக சேவை உத்தியோகஸ்தர்கள், பிரதேச செயலகங்களின் சமூக சேவைகள் உத்தியோகஸ்தர்கள் திரட்டி, அந்தந்த மாவட்ட செயலாளர் ஊடாக முதியோர் தேசிய செயலகத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில், 70 வயதை கடக்கும் முதியவர்களில், மாதாந்தம் 3000 ஆயிரம் ரூபாவுக்கு குறைந்த வருமானம் பெறுவோரின் விபரங்கள் இதன்பிரகாரம் திரட்டப்படுகின்றன.

உதவித் தொகை வழங்க தெரிவு செய்யப்படும் முதியவர்கள், அத்தொகையினை தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள தபால் நிலையம் அல்லது உபதபால் நிலையம் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த சுற்றரிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts