Ad Widget

7 ஊடகவியலாளர்களும் விசாரணைக்கு அழைப்பு

கொழும்பில் இடம்பெறவிருந்த செயலமர்வில் கலந்துகொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (26) இரவு பயணித்த போது, ஓமந்தையில் வைத்து கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்ட 7 ஊடகவியலாளர்களையும் இன்று செவ்வாய்க்கிழமை (29) விசாரணைக்கு வரும்படி ஓமந்தை பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

journalist-media

மேற்படி ஊடகவியலாளர்கள் 7 பேரும் பயணித்த வாகனத்தில் இராணுவத்தினர் கஞ்சா கொண்டு வந்து வைத்தார்கள் எனத் தெரிவித்து, ஓமந்தைப் பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைக்காகவே ஊடகவியலாளர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,

கொழும்பில் நடைபெறவிருந்த ஊடகச் செயலமர்விற்காக யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு வாகனங்களில் ஊடகவியலாளர்கள் பயணித்தனர். இதில் முதல் வாகனம் ஓமந்தைச் சாவடியினைக் கடந்து சென்ற நிலையில் இரண்டாவது வாகனத்தில் வந்தவர்கள் கஞ்சா கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஓமந்தைப் பொலிஸாரினால் தடுக்கப்பட்டனர்.

இதனையடுத்து, ஊடகவியலாளர்கள் தாங்கள் கஞ்சா கொண்டு செல்லவில்லையெனவும் இராணுவத்தினரே கஞ்சாவினைக் கொண்டு வந்து தங்களது வாகனத்தில் வைத்ததாகவும் அதனைத் தாங்கள் பார்த்ததாகவும் கூறி போராட்டம் நடத்தினர்.

இதனால் ஊடகவியலாளர்கள் விடுவிக்கப்பட்டு, அவர்களது வாகனச் சாரதி (சாரதியின் இருக்கைக்கு கீழ் கஞ்சா இருந்தது எனக்கூறி) கைது செய்யப்பட்டு, வவுனியா நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

வாகனத்தில் கஞ்சா வைத்த இராணுவ வீரரை அடையாளம் கண்ட ஊடகவியலாளர்கள், அவருக்கு எதிராகவும் தங்களுடன் தகாத முறையில் நடந்து கொண்ட பொலிஸ் அதிகாரிக்கு எதிராகவும் ஓமந்தைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே இன்று காலை 11 மணிக்கு ஓமந்தை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு, குறித்த 7 ஊடகவியலாளர்களும்கும் ஓமந்தைப் பொலிஸார் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Posts