29 ஐஸ்கிரீம் உற்பத்தி நிலையங்கள் மீள இயங்க அனுமதி

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினால் யாழ் மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்ட 59 ஐஸ்கிறீம், ஜூஸ் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் 29 நிலையங்கள் இன்று முதல் மீண்டும் செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று யாழ். வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

ice-cream

யாழ். மானிப்பாய் வீதியிலுள்ள வர்த்தக சங்க கேட்போர் கூடத்தில் விசேட ஊடக சந்திப்பொன்று நேற்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.

இதில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஐஸ் உற்பத்தி விற்பனை செய்யும் வர்த்தகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவிக்கும்போதே யாழ். வர்த்தக சங்கத் தலைவர் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –

யாழ். மாவட்டத்தில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களினால் நடத்தப்படுகின்ற ஐஸ்கிறீம், ஜூஸ் மற்றும் உப உணவு உற்பத்தி நிலையங்களில் 59 நிலையங்களுக்கு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வர்தகர்கள் வணிகர் கழகத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 27ஆம் திகதி மேற்படி வர்த்தகர்களை அழைத்துப் பேசியிருந்தோம். தொடர்ந்து கடந்த 30 ஆம் திகதி மாகாண சுகாதார அமைச்சர் மற்றும் பணிப்பாளர் ஆகியோருடனும் கலந்துரையாடியிருந்தோம்.

இதனைத் தொடர்ந்து அக் கூட்டத்தில் பல்வேறு திர்மானங்களும் எடுக்கப்பட்டன. இதற்கமைவாக சுகாதார சேவைகள் திணைக்களம் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இதன் முதற்கட்டமாக 29 ஐஸ்கிறீம் மற்றும் யூஸ் உற்பத்தி விற்பனையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.

இதேபோன்று, தடை விதிக்கப்பட்ட ஏனைய நிலையங்களும் அடிப்படைச் சுகாதார வசதிகளை எதிர்வரும் இரு வாரத்திற்குள் ஏற்படுத்திக் கொண்டால் அவற்றையும் மீள இயங்க மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் அறிவித்துள்ளார் என யாழ் வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படுகின்ற உணவுகளைப் பரிசோதிப்பதற்கான ஆய்வு கூடங்களை அமைக்க வேண்டுமென யாழ்ப்பாண வர்த்தக சங்கம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.