2011 (உ/த) பரீட்சை வெட்டுப்புள்ளி பட்டியலை ரத்துச் செய்து பழைய, புதிய பாடத் திட்டங்களுக்கு இஸட் புள்ளி பட்டியலை தயாரிக்க உத்தரவு

2011ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பாக வெளியிடப்பட்ட இஸட் புள்ளி பட்டியலை இரத்துச் செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.ஏற்றுக்கொள்ளப்பட்ட புள்ளிவிபர முறைமைகள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் , பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கு தனித்தனியாக இஸட் புள்ளி பட்டியல்களை மீண்டும் கணிப்பீடு செய்து வெளியிடுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிரதம நீதியரசர் ஷிராணி ஏ பண்டாரநாயக்க, நீதியரசர்கள் என்.ஜி. அமரதுங்க, கே. ஸ்ரீபவன் ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த தீர்ப்பை அளித்தது.

பழைய பாடத்திட்டத்தின் கீழ் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களையும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களையும் ஒன்றாக கருதி இஸட் புள்ளி கணிப்பிடப்பட்டுள்ளதாகவும் இது தவறானது எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் மனுதாரர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

2011 பரீட்சை பெறுபேறுகளை திருத்துவது குறித்து மனுவில் கோரப்படாதநிலையில் இப்பரீட்சை பெறுபேறு விடயத்தில் தான் தலையிடப் போவதில்லை என நீதிமன்றம் தெரிவித்தது.

க.பொ.த. உயர்தர மாணவர்கள் 16 பேருடன் மற்றும் இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பாகவே உயர்நீதிமன்றம் இத்தீர்ப்பை அளித்தது.

பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார, கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ஆர்.ஓ. தட்டில், சட்டமா அதிபர் ஆகியோர் இம்மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.