போதையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி அதிவேகமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை செலுத்தி சென்ற சாரதியை எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியில் அல்லைப்பிட்டி சந்திக்கு அருகாமையில் , ஊர்காவற்துறை பொலிஸார் வீதி போக்குவரத்து கண்காணிப்பு கடமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அதன் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஆபத்தான முறையில் மிக வேகமாக வந்ததனை அவதானித்து , பேருந்தினை பொலிஸார் மறித்து சோதனையிட்டனர் சோதனையின் போது சாரதி மது போதையில் இருந்தமையை பொலிஸார் கண்டறிந்தனர். அத்துடன் சாரதி அனுமதி பாத்திரமும் அவரிடம் இருக்கவில்லை.
அதனை அடுத்து மது போதையில் சாரதி அனுமதி பத்திரமின்றி பயணிகள் பேருந்தினை ஆபத்தான முறையில் செலுத்தி சென்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சாரதியிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை முற்படுத்தினர்.
குறித்த சாரதிக்கு போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான முற்குற்றங்கள் இருப்பதும் , தற்போதும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக வவுனியா பொலிஸாரினால் சாரதி அனுமதி பத்திரம் பெறப்பட்டு “தடகொல” வழங்கப்பட்டுள்ளமையும் மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து சாரதியை எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.