19 நாள் தீவிர சிகிச்சைக்குப் பின் ஓரிரு வார்த்தைகள் பேசிய ஜெயா

உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் விரைவாக குணமடைந்து வருவதாகவும், நேற்று அவர் ஒருசில வார்த்தை பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் (செப்டம்பர்) 22–ம் திகதி இரவு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு வைத்தியர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கு இடையே, கடந்த மாதம் 30–ம் திகதி லண்டன் வைத்தியர் ரிச்சர்டு ஜான் பீலேவும் சென்னை வந்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மேற்கொண்டார். தொடர்ந்து, டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை வைத்தியர்கள் குழுவும் அவருடன் வந்து இணைந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது.

வைத்தியர்களின் தொடர் சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து, அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பை நீக்கவும், சீரான சுவாசம் மேற்கொள்ளவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஊட்டச்சத்து, பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளும் அவருக்கு வழங்கப்படுகிறது.

நீண்ட நாட்களாக அவர் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று அப்பல்லோ வைத்தியசாலை வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை வைத்தியர்கள் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றனர். அவரை தொடர்ந்து, லண்டன் வைத்தியர் ரிச்சர்டு ஜான் பீலேவும் நேற்று காலை புறப்பட்டு சென்றார். அவர் இன்னும் ஒரு சில தினங்களில் மீண்டும் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சையை தொடருவார் என தெரிகிறது.

அதே நேரத்தில், டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை வைத்தியர்களில் ஒருவரான கில்நானி நேற்று இரவு 09.00 மணிக்கு சென்னை வந்தார். அவர் தொடர்ந்து, ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்.

இவ்வாறு சிகிச்சை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் அரசியல் கட்சி தலைவர்களும், ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து தெரிந்துகொள்வதற்காக தினமும் அப்பல்லோ வைத்தியசாலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இன்றும் பல அரசியல் தலைவர்கள் அங்கு சென்றனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும். அவர் ஒரு சில வார்த்தைகள் பேசியதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended For You

About the Author: Editor