Ad Widget

10 லட்சம் மக்கள் வாழும் வடக்கில் ஒன்றரை லட்சம் இராணுவத்தினர்! அச்சத்திலேயே மக்களின் வாழ்க்கை!!

“பத்து இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். யுத்தம் முடிந்த பின்னரும் பெரும் தொகை இராணுவத்தினர் இங்கு நிலைகொண்டிருப்பதற்கான காரணம் என்ன என்பதுதான் எமக்குத் தெரியாமல் உள்ளது. இதனால் மக்கள் அச்சத்திலேயே வாழ்கின்றனர்.” – இவ்வாறு அமெரிக்க அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூடமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.

suresh

அமெரிக்காவின் ஆசிய கொள்கை ஆய்வாளர் ஹண்டர்ஸ் ஸ்டர்ப், கொள்கை ஆய்வுத் துணைத்தலைவர் சிபோஹன் ஒட் ஜாச், அரசியல்துறை நிபுணர் சஜித் கே.காந்தி, இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதி மைக் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று புதன்கிழமை வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

இவ்விஜயத்தின்போது அமெரிக்க அதிகாரிகள் குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று சுன்னாகத்திலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போதே அமெரிக்க அதிகாரிகள் குழுவிடம் மேற்கண்டவாறு தான் தெரிவித்தார் என சுரேஷ் எம்.பி. கூறினார்.

சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமாக இடம்பெற்ற இச்சந்திப்புக் குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“ஆக்கபூர்வமானதாக இடம்பெற்ற இச்சந்திப்பில் வடக்கின் தற்போதைய நிலைமைகள் குறித்து முதலில் என்னிடம் அமெரிக்க அதிகாரிகள் குழுவினர் கேள்வியெழுப்பினர். அதற்கு நான் பதிலளிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்களாகின்ற நிலையிலும் வடக்கில் மீள்குடியேற்றம் என்பதும் இன்னமும் முற்றுப்பெறாதிருக்கின்றது. இதற்கு இராணுவத்தினரின் பிரசன்னமே காரணமாக இருக்கின்றது. குறிப்பாக இராணுவத் தேவைக்காக பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன. மக்களின் நிலங்களில் உயர் பாதுகாப்பு வலயங்கள் காணப்படுகின்றன. 10 இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். யுத்தம் முடிந்த பின்னரும் இவ்வாறான பெருந்தொகை இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளமைக்கான காரணம் என்ன என்பதுதான் எமக்குத் தெரியாமல் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்புச் செலவீனங்களுக்காக வரவு – செலவுத்திட்டத்தில் அதிகூடிய தொகை ஒதுக்கப்பட்டுக்கொண்டே செல்கின்றது. யுத்தம் நிறைவடைந்த வடக்கில் இராணுவக்குறைப்பு இடம்பெற்றிருக்க வேண்டும். அவ்வாறானதொரு செயற்பாட்டை அரசு மேற்கொள்வதற்குப் பதிலாக தொடர்ச்சியாக நிலையான இராணுவ முகாம்களை அமைக்கும் செயற்பாட்டையே மேற்கொண்டு வருகின்றது.

இலங்கையில் ஏனைய மாவட்டங்களில் இவ்வாறான இராணுவ முகாம்கள் காணப்படவில்லை. அம்மாவட்டங்களில் ஏறக்குறைய முப்பதாயிரத்திற்கும் குறைவான இராணுவத்தினரே நிறுத்தப்பட்டுள்ளனர். ஆகவே, இவ்வளவு பெருந்தொகை இராணுவத்தினர் மட்டும் வடக்கில் நிறுத்தப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன என்பதுதான் தெரியாமல் உள்ளது. இதனால் மக்கள் அச்சசூழ்நிலையிலேயே வாழ்ந்து வரவேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

வடக்கு மாகாண சபையால் எவ்விதமான நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாதிருக்கின்றது. ஏனைய மாகாணங்களைப் போலல்லாது இம்மாகாணத்திற்கு மட்டும் இராணுவ முன்னாள் அதிகாரி ஒருவர் ஆளநராக நியமிக்கப்பட்டு வடமாகாண சபையின் சுயாதீனச் செயற்பாட்டுக்கு முட்டுக்கட்டைகளைப் போட்ட வண்ணமுள்ளார். அவ்வாறான நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஆகக்குறைந்தது முதலமைச்சர் நிதியத்தை நிறுவி அதனூடாக அடிப்படைய விடயங்களை முன்னெடுக்க முயற்சித்த போதும் அதற்கும் ஆளுநரால் அனுமதி மறுக்கப்பட்ட நிலைமையே காணப்படுகின்றது.

ஜனநாயகம் வடக்கில் மலிந்து விட்டது என மஹிந்த அரசு போலியானதொரு நிலைமையை வெளிப்படுத்துவதற்காகவே வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி சபை உருவாக்கியதே தவிர அதனூடாக எந்தவிதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்கு இடமளித்திருக்கவில்லை.

13 ஆவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை அரசு தமிழர்களின் பிரதேசமான வடக்கிற்கு ஒருவாறும் ஏனைய மாகாணங்களுக்கு ஒருவாறும் நடைமுறைப்படுத்துகின்றது. அதேநேரம் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக அரசு பொருத்தமான கருத்தைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் சிங்கள – பௌத்த மேலாதிக்க சக்திகளுடன் கூட்டணியமைத்து தமது இனவாத அரசியலையே மேற்கொண்டுவருகின்றனர். இதனால் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொர்பில் அவர்களிடம் திடமான திட்டங்கள் எதுவும் இல்லை. வெறுமனே போலியாக சர்வதேசத்திற்கும், இந்தியாவுக்கும் வாக்குறுதிகளை மட்டுமே வழங்குகின்றார்களே தவிர தீர்வு நோக்கிய முற்போக்கான செயற்பாடுகள் எதனையும் மேற்கொள்ள விரும்பாதிருக்கின்றார்கள் என்று கூறினேன்.

இந்தச் சந்திப்பின்போது மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் இந்த நிலைமைகளில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்புக்கள் இருக்கின்றவான என அமெரிக்க அதிகாரிகள் கேள்வியெழுப்பினார்கள். அதற்கு பதிலளிக்கையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் சிலசமயங்களில் இவ்வாறான நிலைமைகளில் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

அதாவது இராணுவகுறைப்பு ஏற்படலாம், 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படலாம், வடமாகாணசபை சுயாதீன நிலையை அடையலாம். ஆனால், தேசிய பிரச்சினைக்கு தீர்வு என்ற விடயத்தை கருத்தில் கொள்ளும்போது ஆட்சிப்பீடத்திலிருக்கும் எந்த அரசாங்கமும் இனநல்லிணக்கம், அதிகாரப்பகிர்வு போன்ற விடங்களை கவனத்தில்கொண்டு சிங்கள பௌத்த வாதத்தை கைவிட்டால் மட்டுமே சாத்தியமாகும்.

தற்போது கூட மிகவிரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவிருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அதில் நாம் யாரை ஆதரிப்பது என்று இன்னமும் முடிவெடுக்கவில்லை. காரணம் எதிர்த்தரப்புக்கள் தனித்தனியாக களமிறங்கவுள்ளதாக கூறுகின்றன. பொதுவேட்பாளர் தொடர்பாகவும் பேசப்படுகின்றது. எவ்வாறாயினும் தமிழர்களின் பிரச்சினை, தேசிய பிரச்சினைக்கான தீர்வு போன்ற விடயங்களை மையமாக வைத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிப்பது எனத் தீர்மானிக்கும்” – என்றார்.

Related Posts