Ad Widget

10 பக்க சாட்சியங்களை அனுப்புவேன்: சிவாஜிலிங்கம்

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் அடங்கிய 10 பக்கங்கள் கொண்ட சாட்சியங்களை, ஐ.நா விசாரணைக் குழுவுக்கு அனுப்பவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வியாழக்கிழமை (04) தெரிவித்தார்.

sivaji

யாழ்.ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது,

‘எனது சாட்சியத்தில் கட்டாய கருத்தடை, தமிழர் பிரதேசங்களின் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள், காணி அபகரிப்புக்கள், இனப்படுகொலைகள் ஆகியவற்றை சாட்சியங்களாக உள்ளடக்கி அனுப்பவுள்ளேன்.

இலங்கையில் நடைபெற்ற போர் நிறுத்த மீறல்கள், மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட குழு விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

இது தொடர்பில் அவர்கள் இணைத்தளம் ஊடாகவும், ஊடகங்கள் ஊடாகவும் தமது வேண்டுகோளை பதிவு செய்துள்ளார்கள். ஆனால், இதுவரையில் எமது மக்கள் இது தொடர்பாக எந்தவித முனைப்பும் காட்டாமல் இருக்கின்றனர். மின்னஞ்சல், கடிதங்கள் மூலம் பொதுமக்கள் சாட்சியங்களை அளிக்க முடியும்.

எங்களுக்கு எதிர்காலத்திலே நீதி கிடைப்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச ரீதியாக ஒரு நட்டஈடு கிடைப்பதற்கும் அனுப்புகின்ற சாட்சியங்கள் உதவியாகவிருக்கும்.

சாட்சியங்களை பலருக்கு கொடுத்துவிட்டோம், இனி பயனில்லை என்று நினைக்காமல் ஒவ்வொருவரும் தங்களுடைய பங்களிப்புக்களை செய்ய முன்வர வேண்டும்.

இதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடைய மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியினுடைய பிரமுகர்கள் பொதுமக்களுக்கு எந்தவகையிலும் உதவுவதற்கு தயாராக இருக்கின்றார்கள்.

உங்களுக்கு நேர்ந்த அவலங்களை பயமின்றி அனுப்புங்கள். இதுதான் எமது தாழ்மையான வேண்டுகோள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts