Ad Widget

வெள்ளைக்கொடி விவகாரம் மாவையின் குற்றச்சாட்டுக்கு கஜேந்திரகுமார் பதிலடி!!

2009 மே18 அதிகாலை அங்கு சிக்குண்டு உயிருக்காக போராடிக்கொண்டிருந்த ஒன்றரை இலட்சம் மக்களது உயிரை நினைத்து நானும் மாவை அண்ணரும் அழுதோமென தெரிவித்தார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று பத்திரிகையாளர்களிடையே பேசிய அவர் அந்த கடைசி கணங்களினில் அவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன் மற்றும் சமாதான செயலகப்பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் கோரியிருந்தனர்.

அப்போது மஹிந்த நாட்டில் இன்மையால் பஸிலுடனேயே பேசவேண்டியிருந்தது. ஆலோசனைகளினைப்பெற இந்தியாவிலிருந்த கட்சி தலைவர் சம்பந்தனை அழைத்த போது அவர் தொலைபேசி இணைப்பினை துண்டித்துவிட்டார். சுரேஸோ தனது கைத்தொலைபேசியினை செயலிழக்க செய்திருந்தார். உண்மையில் மாவை மட்டும் பதிலளித்தார்.

நானும் அவரும் இயலாமையினால் ஒரு கணத்தில் அழுதோம். ஆனால் மாவையும் தொலைபேசியினை அணைத்துவிட்டதாக என்னால் பொய் சொல்ல முடியும். ஆனால் என் தாய் மீதாக நான் பொய் சொல்லவிரும்பவில்லை.

அரசு உறுதியளித்தற்கு மாறாக தாக்குதல்களினை நடத்திக்கொண்டிருந்தது. சரண் அடைவது இல்லாவிடின் வீரச்சாவை தழுவிக்கொள்வதென்பதே அங்கிருந்தவர்களிற்கு எஞ்சியிருந்த வழிவகையாக இருந்தது.

ஆனால் அதனையெல்லாம் மறந்து மாவை இப்போது சொல்கின்றார் நான் பஸிலுடன் இரகசிய பேச்சு நடத்தினேனாம். மனச்சாட்சியை தொட்டு சொல்லட்டும். அல்லது நிரூபிக்கட்டும். நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுறப்போகும் அச்சத்தில் இப்படி பொய் சொல்லுகின்றார்கள் என்பது மக்களிற்கு தெரியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாற்றம் தேவையென்பது மக்கள் மத்தியில் ஆணித்தரமாக பதிந்துவிட்டது. அதனால் தோல்வி பயத்தில் தனிநபர் தாக்குதல்களில் கூட்டமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

இதயத்தால் இணைந்த ரணில் சொல்கின்றார் ஜ.நாவிற்கு கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் பதில் சொல்லப்போகின்றாராம். அவர்களது கட்சி எதனால் இணைந்ததென்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts