Ad Widget

வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்த நகைகள் குறித்து விசாரணை

வெளிநாடுகளிலிருந்து யாழ்ப்பாணம் வந்து நகைகளை பறிகொடுத்தவர்கள் எவ்வளவு நகைகளை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்தார்கள் என்பது தொடர்பில் அந்தந்த நாடுகளிலுள்ள தூதரகங்கள் மூலம் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஹான் டயஸ் ஞாயிற்றுக்கிழமை (24) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெளிநாடுகளில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்தவர்களின் நகைகள் திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் அண்மைக் காலங்களில் அதிகமாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருடப்பட்ட நகைகள் 35, 40 பவுண்களுக்கு அதிகமாகவே இருப்பதாக முறைப்பாடுகளில் நகை உரிமையாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இருந்தும், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் நகைகள் கொண்டு வருவதற்கு கட்டுப்பாட்டு அளவுகள் இருக்கின்றன. அவற்றை அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் கண்காணிக்கும்.

ஆகவே, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கும் பொருட்டு, அந்தந்த நாடுகளிலுள்ள தூதுரகங்களுடன் தொடர்பு கொண்டு, யாழ்ப்பாணத்திற்கு வந்தவர்கள் எவ்வளவு நகைகளைக் கொண்டு வந்தனர் என்பது தொடர்பில் தகவல்கள் திரட்டப்படவுள்ளன.

முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்ட நகைகளை விட குறைவான அளவில் நகைகள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ரொஹான் டயஸ் மேலும் தெரிவித்தார்.

Related Posts