Ad Widget

வெற்றிலைக்கேணியில் இராணுவத்துக்கென காணி அளவீடு கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கிராமஅலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இராணுவத்தினரின் தேவைக்கென நில அளவையாளர்களால் நேற்று திங்கட்கிழமை ( 29.09.2014) நிலஅளவீடு செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் காணி
உரிமையாளர்களினதும், மக்கள் பிரதிநிதிகளினதும் கடுமையான எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.

மண்டலாய், தட்டாங்கோடு, புல்லாவெளி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய ஏறத்தாழ 700 ஏக்கர் அளவிலான காணியைப் படையினர் தங்கள் பயிற்சித்தேவைக்கெனக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதற்காக நில அளவீடுகளை மேற்கொள்வதற்காகக் கடந்த யூலை மாதம் 21ஆம் திகதியும் நில அளவையாளர்கள் நிலத்தை அளவீடு செய்யும் முயற்சியில் இறங்கியிருந்தார்கள். அப்போதும் அங்கு திரண்ட காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகளின் தீவிர எதிர்ப்பால் அம்முயற்சி கைவிடப்பட்டிருந்தது.

இப்போது மீண்டும் நில அளவை செய்யப்போவதாக நில அளவைத்திணைக்கள அதிகாரிகளினால் காணி உரிமையாளர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்தே காணி உரிமையாளர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தி அப்பகுதிக்கு அவர்களையும் வரவழைத்திருந்தனர்.

கடந்தமுறை நில அளவீட்டை மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது பொதுமக்களின் எதிர்ப்பைச் சந்தித்ததன் காரணமாக, நில அளவையாளர்கள் இம்முறை தமது பாதுகாப்புக்குக் காவல்துறையினரை அப்பகுதிக்கு வருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், இன்று அங்கு காவல்துறையினரோ படையினரோ சமுகமளித்திருக்கவில்லை.

இராணுவத்துக்கென நில அளவீடு செய்யப்படவிருந்த 700 ஏக்கர் அளவு காணியும் பொதுமக்களுக்கு உரிய காணி எனவும், அக்காணிக்குரிய முறையான உறுதிகள் தங்களிடம் இருப்பதாகவும், அக்காணிகளில் முன்னர் தாங்கள் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் அங்கு வருகை தந்திருந்த காணி உரிமையாளர்கள் தெரிவித்திருந்தார்கள்.

நில அளவீட்டுக்கு எதிராகக் காணி உரிமையாளர்களோடு சேர்ந்து அங்கு வருகை தந்திருந்த வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வை நகரசபை உப தலைவர் சதீஸ் ஆகியோரும் தங்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்கள்.

2

4

5

6

7

9

10

Related Posts