Ad Widget

வீதிக்கு ரயில் கடவையை அமைத்து தாருங்கள், கொக்குவில் மக்கள் போராட்டம்

கொக்குவில் உடையார் வீதிக்கு புகையிரத கடவை அமைப்பதற்கு அனுமதி இல்லை என நிர்மாண பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் தற்போது கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு புகையிரதம் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புகையிரத பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இதில் மக்கள் முன்னர் பயன்படுத்திய வீதிகளில் பெரும்பாலானவை கணக்கில் எடுக்கப்படவில்லை.

இதனால் அந்த வீதிகளுக்கு பாதுகாப்புக் கடவையும் அமைக்கப்படவில்லை. இது குறித்து மக்கள் உரிய உத்தியோகத்தர்களை கேட்ட போதும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரைபடத்தில் குறித்த வீதிகள் இல்லை என்றும் கூறப்பட்டது.

இதனையடுத்து நல்லூர் பிரதேச சபை, பிரதேச செயலகம் மற்றும் அரச அதிபர் ஆகியோருக்கும் தெரியப்படுத்தப்பட்டது. எனினும் தீர்வு எதுவும் கிடைக்காதமையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீதிக்கடவையை அமைத்து தரவேண்டும் என்று கோரி குறித்த வீதிக்கு முன்னால் மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கவனயீர்ப்புப் போராட்டத்தில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் வசந்தகுமார், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, பகுதி மக்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Related Posts