Ad Widget

விலை குறைப்பு: மக்கள் விரோதச் செயற்பாடுகளை மூடி மறைக்கும் உபாயம்

அரசின் கடந்த கால மக்கள் விரோதச் செயற்பாடுகளை மூடி மறைக்கும் உபாயம் தான் எரிபொருள், மின்சாரக் கட்டணங்களின் விலை குறைப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.

mavai mp

யாழ். நீர்வேலியில் நேற்று காலை இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் கோப்பாய் கோமகன் வன்னியசிங்கத்தின் 55வது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர் ஒருவரினால் எரிபொருள், மின்சாரக் கட்டணம் ஆகியவற்றின் விலைகளும் கட்டணங்களும் குறைக்கப்படுமென ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளமை தொடர்பில் கேட்கப்பட்ட போதே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

மக்கள் விரோத, ஐனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற இந்த அரசாங்கம் தேர்தல் காலத்தில் மட்டும் அதனை மூடி மறைக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது.

இது போன்ற அறிவிப்புக்களின் மூலமாக மக்களை ஏமாற்றி மீண்டும் மீண்டும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவே அரசாங்கம் முயல்கின்றமையை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கின்ற நிலையில் பெற்றோல், டீசல் மண்னெண்ணைய் ஆகியவற்றின் விலைகளைக் குறைக்கப் போவதாக அறிவித்து இருக்கின்றமை ஐனநாயக விரோத, தேர்தல் விதிமுறைகளை மீறும் நடவடிக்கையாகும்

வாழ்கை செலவு மிக அதிகரித்திருக்கின்ற இந் நேரத்தில் தேர்தல் காலத்தில் மட்டும் அரசாங்கத்தினால் விடுக்கப்படுகின்ற அறிவிப்புக்களை ஏற்றுக் கொள்ள முடியாது, அது மக்களுக்கு மீண்டும் ஏமாற்றத்தையே ஏற்படுத்துவதாக அமையுமென்று நினைக்கிறோம்.

இதே போன்று குறிப்பாக இந்தியாவை எடுத்துக் கொண்டால் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இத்தகைய எந்த அறிவுப்புகளையும் விடுக்க முடியாது.

ஆனால் இங்கு அவ்வாறில்லாமல் அரசாங்கம் நினைத்ததை செய்து வருகின்றது. அரசாங்கம் எதனைச் செய்தாலும் மக்கள் தான் சிந்தித்துச் செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

ஏனெனில் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மக்கள் விரோத ஐனநாயக விரோத நடவடிக்கைகளை மூடி மறைக்கும் வகையில் அரசின் அறிவிப்புக்கள் அமைகின்றன.

எனவே தேர்தல் காலத்தில் மட்டுமல்ல தொடர்ந்தும் இத்தகைய விலை குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் மக்கள் விரோதச் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்தார்.

Related Posts