Ad Widget

விஜயகலா எம்.பி பிணையில் விடுவிக்கப்பட்டார்

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன், இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு மணித்தியாலயங்களில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவரை 5 லட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவித்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வில் உரையாற்றிய போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கை ஓங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவரது இந்த உரை அரசியலமைப்பை மீறும் செயல் எனக் குறிப்பிட்ட சட்ட மா அதிபர், வழக்குத் தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினரைக் கைது செய்வதற்கான பிடியாணையும் அவர்கள் மன்றில் பெற்றிருந்தனர்.

அதனடிப்படையில் வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் திட்டமிட்ட பிரிவிற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு பொலிஸார் அழைப்பாணை வழங்கினர்.

தனது சட்டத்தரணிகளுடன் பொலிஸ் குற்ற புலனாய்வுப் பிரிவுக்கு அவர் இன்று காலை சென்றிருந்த போது, விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டார்.

Related Posts