Ad Widget

விக்ரமுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமே: சமுத்திரகனி

மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகளுக்கான பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விசாரணை’ படம் மூன்று தேசிய விருதுகளை வாங்கிக் குவித்தது.

சிறந்த தமிழ் படம், சிறந்த துணை நடிகர், சிறந்த எடிட்டர் ஆகிய விருதுகளை இப்படம் வாங்கியுள்ளது. இதில், சிறந்த துணை நடிகருக்கான விருது பெற்ற சமுத்திரகனியிடம் தொடர்புகொண்டு பேசியபோது,

எனக்கு தேசிய விருது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. இருப்பினும், இப்படத்தின் இயக்குனரான வெற்றிமாறனுக்கும் தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், அது கிடைக்காமல் போனது வருத்தமே.

அதேபோல், ‘ஐ’ படத்துக்காக விக்ரமுக்கும் தேசிய விருது கிடைக்கும் என மிகவும் எதிர்பார்த்தேன். அந்த படத்திற்காக அவர் கொடுத்த உழைப்பு வார்த்தைகளால் சொல்லமுடியாது. அந்தளவுக்கு மிகப்பெரியது.

அவரை ஒருமுறை நேரில் பார்த்தபோதுகூட, விக்ரமை கட்டிப்பிடித்து பாராட்டினேன். அவர் ‘ஐ’ படத்துக்காக கொடுத்த உழைப்புக்கு கண்டிப்பாக தேசிய விருது கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கு இந்த வருடம் தேசிய விருது அறிவிக்காதது எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது என்று தெரிவித்தார்.

சமுத்திரகனி நடிப்பில் தற்போது ‘அம்மா கணக்கு’ என்ற படம் உருவாகியுள்ளது. மேலும், ‘அப்பா’ என்ற படத்தை இவரே இயக்கி, நடித்தும் வருகிறார். இவ்விரு படங்களிலும் சமுத்திரகனியின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் என அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

Related Posts