Ad Widget

வவுனியா மாணவிக்கு நீதி வேண்டி போராட்டம்! ஹர்த்தால்!!

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் கடந்த 16ஆம் திகதி வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட 13வயது மாணவிக்கு நீதி வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் ஹர்த்தாலுக்கு சமூக வன்முறைக்கு எதிரான மக்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வன்முறைக்கு எதிரான மக்கள் அமைப்பின் கலந்துரையாடல் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்தில் இடம்பெற்றது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிப் பிரமுகர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர், வர்த்தக பிரமுகர்கள், அதிபர், ஆசிரியர்கள், மகளிர் அமைப்பு பிரதிநிதிகள், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்ட கலந்துரையாடலில் கடந்த 16ஆம் திகதி வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட 13 வயது மாணவி ஹரிஸ்ணவிக்கு நீதிவேண்டியும், குற்றாவாளிகளை கைது செய்யக் கோரியும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி மற்றும் ஹர்த்தால் என்பவற்றை மேக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி செவ்வாய்கிழமை வவுனியா, மன்னார் வீதியில் உள்ள காமினி மகாவித்தியாலயத்தில் இருந்து ஊர்வலமாக சென்று நீதிகோரி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கான மகஜர் வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளது. காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் இப்பேரணியில் பாதிக்கப்பட்ட மாணவிக்காக அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் சமூகத்தினர், பொது அமைப்புக்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுகின்றோம்.

அத்துடன் அன்றைய தினம் காலை 10.00 மணி தொடக்கம் 11.00 மணிவரை படுகொலை செய்யப்பட்ட மாணவிக்காக அனைத்து பாடசாலை மாணவர்களையும் அவர்களின் பாடசாலைகளில் கவனயீர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுகின்றோம்.

மறுநாள் புதன்கிழமை வவுனியாவில் இடம்பெறவுள்ள முழுநேர ஹர்தாலுக்கு அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் சமூக பொது அமைப்புக்கள், மகளிர் அமைப்புக்கள், அரச அரசசார்பற்ற அமைப்புக்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், வர்த்தக சங்கம், வவுனியா பிரஜைகள் குழு, யாழ் பல்கழைக்கழக வளாகம், வவுனியா விவசாயக் கல்லூரி, தேசிய கல்வியல்க் கல்லூரி, வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி, தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், இலங்கை போக்குவரத்துறை, வங்கிகள் ஆகிய அமைப்புக்களை ஆதரவு தரும்படி ஏற்பாட்டுக்குழு சார்பாக கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts