இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவருமான மாண்புமிகு தொல். திருமாவளவன் அவர்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பில், ஈழத் தமிழர்களின் இன விடுதலைக்கான பயணத்தில் கடந்த காலங்களிலும் தற்போதைய காலகட்டத்திலும் ஆற்றப்பட்டு வரும் முக்கியமான பங்களிப்புகளுக்காக தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
மேலும், ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய முன்னேற்றப் பயணத்தில் தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு மக்களும் தொடர்ந்து வழங்கக்கூடிய காத்திரமான பங்களிப்புகள் மற்றும் அரசியல், மனிதாபிமான ரீதியான ஆதரவுகளையும் அழுத்தங்களையும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள், ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகள், தேசிய இருப்பு மற்றும் இனநீதிக்கான கோரிக்கைகளை நீண்டகால அர்ப்பணிப்புடனும் வரலாற்றுப் பொறுப்புணர்வுடனும் தொடர்ந்து முன்னிறுத்தி வரும் அரசியல் ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்கிறார்.
கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் மற்றும் சமூக ஆதரவை வலுப்படுத்தி, தமிழர்களின் இன அடையாளம், தன்னாட்சி மற்றும் நீதிக்கான உரையாடல்களை பொதுத்தளத்தில் நிலைநிறுத்தி, தமிழ்நாடு – ஈழத் தமிழ் உறவின் அரசியல் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.