Ad Widget

வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் யாழ் பல்கலை மாணவன் மீது பொலிஸார் தாக்குதல்!

நண்பரின் வீட்டுக்கு நிகழ்வொன்றுக்காகச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்றை தடுத்த நெடுங்கேணிப் பொலிஸார் அவர்களில் ஒருவரைத் தாக்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

வவுனியா ஒலுமடுவில் உள்ள நண்பரின் வீட்டுக்கு நிகழ்வொன்றுக்காகச் சென்றிருந்த யாழ். பல்கலை மாணவர்கள் 6 பேர் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் வீடு திரும்புவதற்காக பஸ்ஸுக்காக காத்திருந்தனர்.

பஸ் வராத காரணத்தால் முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி அறுவரும் அதில் பயணம் செய்துள்ளனர். இதன்போது அவ்வழியாக வந்த நெடுங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிவில் உடையில் வாகனத்தில் வந்தார் என்றும் – தம்மை கண்டதும் அவர் வாகனத்தை விட்டு இறங்கி, முச்சக்கரவண்டியில் 3 பேர்தான் போகமுடியும். என்று கூறி சாரதியை மிரட்டினார் என்றும் – பஸ்ஸுக்காகக் நீண்டநேரம் காத்திருந்துவிட்டு வேறு வழியில்லாமல் முச்சக்கரவண்டியில் பயணித்தோம் என்று தாம் பொலிஸ் அதிகாரிக்கு கூற எம்மில் ஒருவரை அவர்கடுமையாகத் தாக்கினார் என்றும் – மாணவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் தம்மை பொலிஸ் நிலையம் வரும்படி அழைந்துச் சென்றதுடன் முச்சக்கரவண்டியையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றார் அந்த அதிகாரி. சம்பவம் குறித்து நெடுங்கேணி பிரதேச செயலருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

அவர் அங்கு வந்து பொலிஸாருடன் கலந்துரையாடி மாணவர்களை விடுவித்தார் என்றும், எண்ணிக்கைக்கு அதிகமாக ஆள்களை ஏற்றியமைக்காக தண்டப்பணம் அறவிடப்பட்ட பின்னர் சாரதி விடுவிக்கப்பட்டார் என்றும், விடயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று பொலிஸார் தம்மிடம் தெரிவித்தனர் என்றும் அந்த மாணவர்கள் தெரிவித்தனர்.

தமக்கு நேர்ந்த கதி குறித்து தாம் வவுனியாவிலுள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடப்போகிறோம் என்று அந்த மாணவர்கள் தெரிவித்தனர்.

Related Posts